உதட்டுப் பிளவு மற்றும் மேல்வாய்ப் பிளவு

Cleft lip and cleft palate in babies [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

பிறவிக் குறைபாடாகத் தோன்றும் பிளவுபட்ட உதடு மற்றும் பிளவுபட்ட மேல்வாய் பற்றிக் கற்றுக் கொள்ளுங்கள்.

பெரும்பாலும் கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதங்களில் உதடு மற்றும் மேல்வாயை உருவாக்கும் உறுப்புகள் இணையும். இந்தப் பகுதிகள் சரியான முறையில் இணையாவிட்டால், இந்தப் பகுதிகளுக்கிடையே பிளவு எனப்படும் ஒரு இடைவெளி தோன்றும். பிளவுகள், மாதிரியிலும் கடுமையிலும் வித்தியாசப்படும். உதட்டுப் பிளப்பு மற்றும் மேல்வாய்ப் பிளப்பு என்பன பிறவிக் குறைபாட்டு வகைகளில் மிகவும் சாதாரணமானது. இது ஏறக்குறைய 1000 இல் ஒரு குழந்தைக்கு ஏற்படும். உதட்டுப் பிளப்பு மற்றும் மேல்வாய்ப் பிளப்புள்ள குழந்தைகள் வேறு எந்த பிறவிக் குறைபாடும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பார்கள். பிளவுகள் உள்ள சில குழந்தைகளுக்கு வேறு மருத்துவ உடல்நிலைப் பிரச்சினைகளும் இருக்கலாம்.

உதட்டுப் பிளவு

உதட்டுப் பிளவு என்பது மேல் உதட்டில் ஒரு பிரிவு ஏற்படுவதாகும். கர்ப காலத்தின் தொடக்க வாரங்களில், மூக்கு மற்றும் மேற்தாடையின் குறிப்பிட்ட சில பாகங்கள் சரிவர இணையாவிட்டால் உதட்டுப் பிளவு ஏற்படலாம். உதட்டில் V போன்ற ஒரு சிறிய வெட்டிலிருந்து மூக்கு மற்றும் முரசு வரிசையின் பின்பகுதிவரைச் செல்லும் ஒரு முழுமையான பிரிவு வரை உதட்டுப் பிளவின் கடுமை வேறுபடலாம்.

மேல்வாய்ப் பிளவு

மேல்வாய்ப் பிளவு என்பது மேல்வாயின் மத்தியில் ஏற்படும் ஒரு பிரிவு ஆகும். கர்ப்ப காலத் தொடக்கத்தில் வாயின் மேற்கூரைப் பகுதியும் மூக்குத் துவாரமும் சரிவர இணைக்கப்படாதிருந்தால், மேல்வாய்ப் பிளவு உண்டாகலாம். மேல்வாயின் பிற்பகுதியில் மிகவும் சிறிய ஒரு திறப்பிலிருந்து, வாயின் மேற்கூரையில் ஒரு பெரிய இடைவெளிவரை, மேல்வாய்ப் பிளவுவின் கடுமை வேறுபடலாம்.

பிளவுபட்ட உதடு மற்றும் அண்ணம்மூக்கு வரையான பிளவுபட்ட உதடுள்ள குழந்தை மற்றும் பிளவுபட்ட உதட்டையும் அண்ணத்தையும் காட்டும் வாய் திறந்துள்ள குழந்தை
இது பிறப்பின் போது இருக்கும் ஒரு நிலை.  இதன்போது மேல் உதட்டில் இடது அல்லது வலதுபக்கத்தில் (அல்லது இரண்டிலும்) ஒரு பிளவு காணப்படும். இது மூக்குவரை நீழக்கூடும்.  பிளவுபட்ட அண்ணம் என்பது வாயின் கூறையில் ஒரு பிளவாகும். இது பிளவுபட்ட உதட்டோடு சேர்ந்தும் இருக்கலாம்.

உதட்டு மற்றும் மேல்வாய்ப் பிளவு பற்றிய கவலைகள்

உதடு மற்றும் மேல்வாய்ப் பிளவு குழந்தைகளின் பெற்றோர்களுக்கு சமூகச் சவால்களை அளிக்கலாம் என்பது வெளிப்படை. இந்த நிலைமை சீர் செய்யாது விடப்பட்டால், குழந்தை வளர்ந்து வரும்போது அவளுக்கும் அவ்வாறிருக்கும். பெரும்பாலும் பெற்றோர்கள் ஒரு “பூரணமான” குழந்தையைக் கனவு காண்பார்கள். அவர்களின் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு ஒரு பிளவு இருக்கிறது என்பதை உணரும்போது ஏமாற்றமடைவார்கள். இறுதியாக என்ன சம்பவித்து என்பதை ஏற்றுக்கொள்ளும்வரை அதிர்ச்சி, மறுப்பு, துக்கம், மற்றும் கோபம் போன்ற அநேக உணர்ச்சிகளுக்குட்படுவார்கள். இந்த அசாதாரண நிலைமைகளை அறுவைச் சிகிச்சை எப்படி வெற்றிகரமாகச் சரிசெய்யும் என்பதை அநேக பெற்றோர்கள் உணருவதில்லை.

உதடு மற்றும் மேல்வாய்ப் பிளவுக்குச் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், குழந்தைக்குப் பாலூட்டுதல், காது கேட்டல், பற்களின் வளர்ச்சி, மற்றும் பேச்சு போன்ற பிரச்சினைகள் உட்பட வேறு சவால்களையும் உண்டாக்கலாம்.

பாலூட்டுதல்

உதடு மற்றும் மேல்வாய்ப் பிளவுள்ள ஓரு குழந்தைக்கு உறிஞ்சுவதில் அல்லது பால் குடிப்பதில் கஷ்டம் இருக்கலாம். பாலூட்டும் செயலை எப்படி இலகுவாகச் செய்யலாம் என்பதில் பெற்றோருக்குக் குறிப்புகள் வழங்குவதில், தொழில் ரீதியாகச் செய்முறை சிகிச்சையளிப்பவர் அல்லது பேச்சு மற்றும் மொழி பற்றிய நோய் மூலத்தை அறிந்த வல்லுனர் உதவி செய்யலாம்.

காது கேட்டல்

மேல்வாய்ப் பிளவு சில சமயங்களில் நடுக்காதைப் பாதிக்கலாம். அதனால் ஒரு குழந்தையின் கேட்கும் திறன் பாதிக்கப்படலாம். நடுக்காதில் திரவம் உண்டாகி, கேட்கும் திறனைத் தற்காலிகமாக இழக்கச் செய்யலாம். அல்லது காதுத் தொற்று நோயை ஏற்படுத்தலாம். சில வேளைகளில் காதிலிருந்து திரவத்தை வெளியேற்ற காதினுள் குழாய்களை உட்செலுத்தவேண்டி நேரிடலாம்.

பற்கள்

உதடு மற்றும் மேல்வாய்ப் பிளவு குழந்தையின் பற்களைப் பாதிக்கலாம். குழந்தை சில பற்களை இழக்கலாம் அல்லது மேலதிக பற்கள் முளைக்கலாம், சிறிய பற்கள் அல்லது உருக்குலைந்த பற்கள் முளைக்கலாம். சில பிள்ளைகளுக்கு மேற்தாடை, உதடுகள், மற்றும் மூக்கை மேம்பட்ட நிலைக்குக் கொண்டுவருவதற்காக பல் மருத்துவ சிகிச்சை தேவைப்படும். பிளவு அறுவைச் சிகிச்சையின் விளைவை முன்னேற்றுவிக்கப் பல் மருத்துவ சிகிச்சை உதவி செய்யும்.

பேச்சு

சாதாரண பேச்சு முன்னேற்றத்துக்கு மேல்வாய் மிகவும் முக்கியமானது. மேல்வாய்ப் பிளவு சரிசெய்யப்பட்டபின் அநேக பிள்ளைகளுக்கு பேச்சு சிகிச்சை முறை தேவைப்படும்.

உதட்டுப் பிளவு மற்றும் மேல்வாய்ப் பிளவுக்கு சிகிக்கை

உதடு அல்லது மேல்வாய்ப் பிளவுள்ள எல்லாக் குழந்தைகளும், பிறந்து ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் ஒரு பிளாஸ்ரிக் அறுவைச் சிகிச்சை மருத்துவரை சந்திக்கவேண்டும். ஒவ்வொரு புதிதாகப் பிறந்த குழந்தைகளின் பிளவுகள் வித்தியாசப்படுவதால், அறுவைச் சிகிச்சையும் பிள்ளைக்குப் பிள்ளை மாறுபடும்.

உங்கள் பிள்ளைக்கு எந்த அறுவைச் சிகிச்சை நுட்பம் தேவைப்படும் என்பதை பிளாஸ்ரிக் அறுவைச் சிகிச்சை நிபுணர் தீர்மானிப்பார்.​

Last updated: ستمبر 10 2009