உடல் நீர்வறட்சி

Dehydration [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

உடல் நீர்வறட்சி என்பது சரியாக இயங்குவதற்குத் தேவையான போதுமான திரவத்தை உடல் கொண்டிராத போது ஏற்படுகிறது. பிள்ளைகள் உடல் நீர்வறட்சியின் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை ஆகியவற்றைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

உடல் நீர்வறட்சி என்பது என்ன?

சிறுநீர் கழித்தல் மற்றும் வியர்வை ஆகியவற்றின் ஊடாக நாம் தினமும் உடல் திரவங்களை (நீர் மற்றும் வேறு திரவங்கள்) இழக்கின்றோம். உணவருந்துதல் மற்றும் பானம் பருகுதல் மூலம் இழக்கப்பட்ட நீரை மாற்றீடு செய்கிறோம். பொதுவாக, இந்த செயற்பாட்டினை எமது உடல் கவனமாக சமநிலைப்படுத்துவதால், நாம் இழக்கின்ற அதே அளவு நீரை மாற்றீடும் செய்கிறோம். ஆரோக்கியமான உடல் நீர் சமநிலையைப் பேணுவதில், சோடியம், பொட்டாசியம், மற்றும் குளோரைட் போன்ற சில கனிப்பொருட்களும் உட்பட்டுள்ளன.

உடலுக்குள் செல்வதைவிட அதிக அளவு திரவம் வெளியேறும்போது உடலில் நீர் வறட்சி ஏற்படுகின்றது. பிள்ளை போதிய அளவு திரவங்களை உட்கொள்ளாதபோது அல்லது வழக்கத்தைவிட அதிகமான அளவு உடல் திரவத்தை இழக்கும்போது இது ஏற்படுகின்றது. சமநிலையில் குழப்பம் ஏற்படுவதால் உடல் நீர் வறட்சி விழைவடைகின்றது.

பிள்ளையின் வயது மற்றும் திரவம் எவ்வாறு இழக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து உடல் நீர் வறட்சி மெதுவாகவோ அல்லது விரைவாகவோ நடைபெறலாம். இளம் பிள்ளைகளுக்கும் குழந்தைகளுக்கும் அவர்களின் உடல் சிறியதாக இருப்பதாலும் மற்றும் சிறிய அளவு திரவமே உடலில் சேமித்து வைக்கப்படிருப்பதாலும், இவர்களுக்கு உடல் நீர் வறட்சி ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. வளர்ந்த பிள்ளைகளும் பருவ வயதினரும் கடுமையற்ற திரவ சமநிலையின்மையை நன்றாகக் கையாளக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.

உடல் நீர்வறட்சிக்கான காரணங்கள்

உடல் நீர்வறட்சிக்கான மிகப் பொதுவான காரணங்கள்:

  • சுகவீனத்தின் போது குறைவாக திரவம் உட்கொள்ளுதல்
  • வயிற்றோட்டம் மற்றும்/அல்லது வாந்தியெடுப்பதினால் திரவம் இழத்தல்

ஆரோக்கியமான குழந்தைகள் உடலில் நீர் வறட்சி ஏற்படாதவாறு அவ்வப்போது வாந்தியெடுக்க அல்லது தளர்வாக மலம் கழிக்கக்கூடியவர்களாய் இருக்கிறார்கள். குறிப்பாக குழந்தைகளிலும் இளம் பிள்ளைகளிலும் உடல் நீர் வறட்சி திடீரெனத் தோன்றுவதோடு ஆபத்தானதாகவும் இருக்கலாம். பிள்ளைகள் வாந்தியெடுத்தால், மலத்தில் நீரை இழந்தால் மற்றும் திரவம் பருக இயலாதிருந்தால், அவர்கள் விரைவாக உடலில் திரவத்தை இழந்து மிகவும் சுகவீனமடையக்கூடும்.

மேலதிகத் தகவலுக்கு, தயவு செய்து வாந்தி மற்றும் டையரியா வைக் காண்க

உடல் நீர்வறட்சிக்கான பொதுவான அடையாளங்களும் அறிகுறிகளும்

உங்கள் பிள்ளைக்கு கீழ்க்காண்பனவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டதிருக்கலாம்.

  • அமைதியின்மை, தூக்கக்கலக்கம், சிடுசிடுப்பு
  • குளிர்ந்த அல்லது வியர்த்த சருமம்
  • குன்றிய உடற் சக்தி, பலவீனமாக அல்லது நொண்டுவதுபோல் காணப்படுதல்
  • அழும்போது கண்ணீரின்மை
  • காய்ந்த, ஒட்டும்தன்மையுடைய வாய் மற்றும்/ அல்லது நாக்கு
  • குழிவிழுந்த கண் அல்லது குழந்தையின் தலையில் தாழ்ந்த உச்சிக் குழி
  • குறைந்த அளவான சிறுநீர், 8 இலிருந்து 12 மணிநேரங்களுக்கு சிறுநீர் கழிக்காமை அல்லது கடும் நிற சிறுநீர்

உடல் நீர்வறட்சியை அளவிடுதல்

பொதுவாக, சுகவீனமுற்ற பிள்ளையின் எடையைக் கணக்கெடுத்து இதை பிள்ளை சுகவீனமடைவதற்கு முந்தின எடையோடு ஒப்பிடுவதன் மூலம் நாம் உடல் நீர் வறட்சியை அளவிடுகிறோம். இந்த இரண்டு எடைகளுக்கும் இடையிலுள்ள வித்தியாசமே பிள்ளை இழந்த திரவத்தின் அளவாகும். இருப்பினும், இது அடிக்கடி சாத்தியமாவதில்லை: வேறுபட்ட தராசுகள் சற்று வேறுபட்ட எடைகளைக் காண்பிக்கின்றன, மற்றும் பிள்ளை சுகவீனமடைவதற்கு சற்று முன்பு இருந்த எடையை துல்லியமாக அளவிட முடிவதில்லை.

உடல் நீர் வறட்சியின் கடுமையை அளவிடுவதற்கு, கிளினிக்கல் உடல் நீர் வறட்சித் தராசை சுகநல உத்தியோகஸ்தர்கள் பயன்படுத்துகிறார்கள். நீங்களும் அதை பயன்படுத்தலாம். உங்கள் பிள்ளை குணமடைகின்றதா, நிலைமை அவ்வாறே தான் இருக்கின்றதா, அல்லது மோசமடைகின்றதா என்பதைக் கண்டறிய இந்தத் தராசு உங்களுக்கு உதவக்கூடும். ஒரு மருத்துவர் உடல் நீர் வறட்சியை மதிப்பீடுசெய்ய மேலதிக விடயங்களைப் பயன்படுத்தக்கூடும், ஆனால் இந்தத் தராசைப் பாவிப்பது நல்லதொரு ஆரம்பமாகும்.

உங்கள் பிள்ளையில் நீங்கள் அவதானிக்கும் அடையாளங்கள் அல்லது அறிகுறிகளுக்கு, இந்த அட்டவணை சில இலக்கங்களை வழங்குகின்றது. இலக்கங்களின் தொகை எவ்வளவு உயர்வாக இருக்கின்றதோ அவ்வளவுக்கு உடல் நீர் வறட்சி கடுமையானதாகும்.

உங்கள் பிள்ளையின் உடல் நீர்வறட்சி நிலையைக் கணக்கிட:

  1. உங்கள் பிள்ளையின் அறிகுறிகளைக் குறித்து வையுங்கள்.
  2. ஒவ்வொரு அறிகுறிக்கும், அட்டவணையிலுள்ள புள்ளியளவை கண்டுபிடியுங்கள்
  3. புள்ளிகளைக் கூட்டி மொத்த மதிப்பெண்களைக் கணக்கிடுங்கள்.

உதாரணமாக, உங்கள் பிள்ளைக்கு உலர்ந்த வழுநீர்ம மென்னுறையிருந்தால் ( 2 புள்ளிகள்), கண்ணீரின் அளவு குறைதல் (1 புள்ளி), மற்றும் வியர்வை கொண்ட தோற்றம் (2 புள்ளி), மொத்த மதிப்பெண் 5 புள்ளிகளாகும். மொத்த மதிப்பெண் 5 என்பது பிள்ளைக்கு நடுத்தரத்திலிருந்து கடுமையான உடல் நீர் வறட்சி இருப்பதைக் குறிக்கும்.

மருத்துவ உடல் நீர்வறட்சி அளப்பு

012
பொதுவான தோற்றம்சாதாரணம்தாகம், அமைதியற்றிருத்தல் அல்லது சோம்பல் ஆனால் தொடும்போது சிடுசிடுப்புநித்திரைக்குணம், நொண்டுதல், குளிர், வியர்த்தல்
கண்கள்சாதாரணம்சற்றுக் குழிவிழுந்திருத்தல்மிகவும் குழிவிழுந்திருத்தல்
வழுநீர்ம மென்னுறை*ஈரப்பசைஒட்டும்தன்மைவறட்சி
கண்ணீர்காணப்படும்குறைந்துள்ளதுகாணப்படவில்லை

* வழுநீர் மென்னுறை, வாய் மற்றும் கண்களின் ஈரப்பசையுள்ள மெல்லிய படலத்தை உட்படுத்தும்.

0 மதிப்பெண் = உடல் நீர்வறட்சியில்லை

1 லிருந்து 4 மதிப்பெண்கள் = சிறிது உடல் நீர்வறட்சி

5 லிருந்து 8 மதிப்பெண்கள் = நடுத்தரம் முதல் கடுமையான உடல் நீர்வறட்சி

(கோள்ட்மான் 2008)

உடல் நீர்வறட்சிக்குச் சிகிச்சை

உடல் நீர் வறட்சிக்கான சிகிச்சை, பிள்ளைக்கு ஏற்பட்டுள்ள நீர் வறட்சியின் அளவில் தங்கியுள்ளது.

நடுத்தரத்திலிருந்து கடுமையான உடல் நீர்வறட்சி (கிளினிக்கல் உடல் நீர்வறட்சி தராசில் 5 முதல் 8 புள்ளிகள்)

மதிப்பீடு மற்றும் சிகிச்சைக்காக உடனடியாக பிள்ளையை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

கடுமையற்ற உடல் நீர்வறட்சி (கிளினிக்கல் உடல் நீர்வறட்சி தராசில் 1 முதல் 4 புள்ளிகள்)

பிள்ளை இழந்துவிட்ட நீரையும் உப்பையும் மாற்றீடு செய்ய அவனுக்கு வாய்வழி உடல் நீரேற்றக் கரைசல் கொடுங்கள். விற்பனைக்குள்ள பெடியலைட், காஸ்ட்ரோ லைட், என்ஃபலைட் அல்லது வேறு பிரான்டுகள் ஒழுங்காக சமநிலைப்படுத்தப் பட்ட அளவில் நீர், சீனி, உப்புகளைக் கொண்டிருப்பதோடு திரவத்தை அகத்துறிஞ்சும் தன்மையை ஊக்குவிக்கும் உடல் நீரேற்றக் கரைசல்களாகும். குறிப்பாக குழந்தைகளுக்கும் இளம் பிள்ளைகளுக்கும், வெறும் தண்ணீர் அல்லது வீட்டில் செய்த கரைசல்களை விட இந்த உற்பத்திப் பொருட்களைப் பாவிப்பது சிறந்ததாகும்.

பிள்ளைக்கு ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் 5 மிலீ ( 1 தேக்கரண்டி) கொடுத்து பின்பு அவன் சகித்துக்கொள்வானாகில் ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் 30 மிலீ (1 அவுன்ஸ்) வாரை உயர்த்தவும். 1 இலிருந்து 2 மணிநேரங்களுக்குள் ஒவ்வொரு கிலோகிராம் உடல் நிறைக்கும் 25 இலிருந்து 50 மிலீ என்ற இலக்கை வைக்கவும். அதாவது உங்கள் பிள்ளையின் நிறை 13 கிலோ (29 இராத்தல்) என்றால் உங்களுடைய இலக்கு, மொத்தம் 325 தொடங்கி 650 மிலீ (11 தொடங்கி 22 அவுன்ஸுகள்) வாய் வழி உடல் நீரேற்றக் கரைசலை 1 இலிருந்து 2 மணிநேரங்களுக்குள் கொடுப்பதாகும்.

உங்கள் குழந்தை தாய்ப்பால் குடிப்பதானால் தொடர்ந்து தாய்ப்பால் கொடுங்கள்.

உடல் நீர்வறட்சியில்லை ( கிளினிக்கல் உடல் நீர்வறட்சித் தராசில் 0 புள்ளி)

பிள்ளைக்கு தொடர்ந்தும் திரவங்களையும் வயதுக்கேற்ற உணவையும் கொடுங்கள். உங்கள் பிள்ளைக்கு வாந்தி அல்லது வயிற்றோட்டமிருந்தால், ஒவ்வொரு வாந்தி அல்லது வயிற்றோட்ட நிகழ்வுக்கும், 10 மிலீ/கிலோகிராம் வாய் வழி உடல் நீரேற்றக் கரைசலைக் கொடுங்கள். குழந்தைக்கு சிறிய அளவில் அடிக்கடி உணவூட்டலைத் தொடருங்கள்.

உடல் நீரேற்றத்துக்குப் பின் சிகிச்சை

உங்கள் பிள்ளை நன்கு நீரேற்றப்பட்ட பின்பு, அவன் வழக்கமாக உண்ணும் உணவுகளுக்கு அவனைப் பழக்கப்படுத்துவது அடுத்த படியாகும். கடைசியாக நடைபெற்ற வாந்தி நிகழ்வுக்குப் பிறகு 4 இலிருந்து 6 மணி நேரங்களுக்குப் பின்பு இது நடைபெறலாம். பிள்ளை வழக்கமாக விரும்பும் உணவையும் பானங்களையும் அவனுக்குக் கொடுங்கள்.

பிள்ளைக்கு நீங்கள், BRAT ( வாழை, சோறு, அப்பிள் சோர்ஸ், டோஸ்ட்) போன்ற கட்டுப்படுத்தப்பட்ட உணவுத் திட்டத்தைக் கொடுக்க வேண்டியதில்லை. இருப்பினும், அதிக சீனி அல்லது இனிப்பு, பொரித்த அல்லது கொழுப்பு அதிகம் கொண்ட உணவு, மற்றும் உறைப்பான உணவுகள் ஆகியவற்றை அவன் நலமடையும்வரை கொடுக்க வேண்டாம்.

உங்கள் பிள்ளையின் ஃபோர்மூலா அல்லது பாலை நீரினால், வாய்வழி நீரேற்றக் கரைசல் அல்லது வேறு எந்த திரவத்தாலும் செறிவு குறையச் செய்ய வேண்டாம்.

உங்கள் பிள்ளைக்கு வாந்தியெடுத்தல் அல்லது வயிற்றோட்டம் தொடருமானால், ஒவ்வொரு மலம் கழித்தல் அல்லது வாந்தியெடுத்தல் நிகழ்வுக்கும் பின், 10 மிலீ/கிலோகிராம் வாய் வழி நீரேற்றக் கரைசலை அவனுக்குக் கொடுக்கவும். அத்தோடு அவன் வழக்கமாக விரும்பும் உணவையும் பானங்களையும் நீங்கள் கொடுக்கலாம். வயிற்றோட்டம் இருந்தால்கூட, பிள்ளையின் உடல் நிவாரணமடைவதற்கு தேவையான பால் மற்றும் ஊட்டச்சத்து உணவுகளை தொடர்ந்து கொடுப்பது நன்மையானதாகும்.

வாய்வழி உடல் நீரேற்றக் கரைசலைக் கொண்டு எதிர்கால நிகழ்வுகளைத் தவிர்த்தல்

உடல் நீரேற்றக் கரைசலை அடிக்கடி மற்றும் உடல் நீர் வறட்சி அறிகுறிகள் தோன்றிய உடனேயே கொடுப்பதன் மூலம், பிள்ளைக்கு உடல் நீர் வறட்சி ஏற்படுவதை நீங்கள் தடுக்கலாம். இந்தக் கரைசல்கள் பாவிப்பதற்குத் தயாராக உள்ள திரவம், பொப்சிக்கிள்ஸ், மற்றும் பவுடர் ஆகிய வடிவங்களில் மருந்துக்கடைகளில் கிடைக்கும். பவுடர்களை வீட்டில் வைத்திருப்பது இலகுவானது மற்றும் அவற்றிற்கு நீண்ட காலாவதியாகும் திகதிகள் உள்ளன, ஆனால் அவை மிகக் கவனமாக கலக்கப்படவேண்டும், அவ்வாறு செய்யப்படாவிட்டால் பிழையான செறிவு பிள்ளைக்கு வழங்கப்பட்டு விடும்.

உங்கள் பிள்ளை போத்தல் அல்லது கப்பில் வழங்கப்படும் வாய்வழி உடல் நீரேற்றக் கரைசலை மறுத்தால், கரைசலை தேக்கறண்டி அல்லது சிறிஞ்ச் மூலம் கொடுக்கவும். கரைசலின் வெப்பநிலை முக்கியமற்றது. நீங்கள் கரைசலை பிள்ளைக்குப் பிடித்தவாறு இளம் சூடு, குளிர் அல்லது அறைவெப்பநிலைத் திரவங்களில் கலக்கலாம்.

மருத்துவ உதவியை எப்போது நாடவேண்டும்

பின்வருவனவற்றின் போது உங்கள் பிள்ளையின் வழக்கமான மருத்துவரை அழையுங்கள்:

  • உங்கள் பிள்ளை வாய்வழி உடல் நீரேற்றக் கரைசலை உட்கொள்ள மறுக்கின்றது
  • உங்கள் பிள்ளை தொடர்ந்து வாந்தியெடுக்கின்றது

பின்வரும் நிலைமைகளின் போது உங்களுக்கு மிக அருகிலிருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு உங்கள் பிள்ளையை எடுத்துச் செல்லுங்கள் அல்லது அவசியமேற்பட்டால் 911 ஐ அழையுங்கள்:

  • உங்கள் பிள்ளை சுகமடைவதாகத் தெரியவில்லை அல்லது இன்னுமதிக உடல் நீர்வறட்சியடைகிறது
  • வயிற்றோட்டத்தில் அல்லது வாந்தியில் இரத்தமுள்ளது அல்லது வாந்தி பச்சை நிறமாக மாறுகிறது
  • உங்களால் இலகுவில் சமாளிக்கமுடியாத வலி உங்கள் பிள்ளைக்கு இருக்கிறது அல்லது அது போதிய அளவு திரவத்தை அவன் உட்கொள்ள முடியாமல்ச் செய்கிறது
  • வயிற்றோட்டம் 10 நாட்களுக்கும் அதிகமாக நீடிக்கிறது

முக்கிய குறிப்புகள்

  • குழந்தைகளுக்கும் இளம் பிள்ளைகளுக்கும் உடல் நீர்வறட்சி ஏற்படும் ஆபத்து அதிகமுள்ளது.
  • முன்கூட்டிய, தகுந்த சிகிச்சை உடல் நீர்வறட்சியைத் தவிர்க்கும்.
  • கடுமையற்ற உடல் நீர்வறட்சியுள்ள பிள்ளைகளை வீட்டிலேயே சமாளிக்கலாம்.
  • நடுத்தர மற்றும் கடுமையான உடல் நீர்வறட்சியுள்ள பிள்ளைகள் மருத்துவரால் பார்வையிடப்பட வேண்டும்.
Last updated: نومبر 17 2009