HIV யும் உங்கள் குழந்தையும்

HIV and your baby [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

உங்களது குழந்தைக்கு HIV தொற்றுவதற்கான அபாயத்தை எவ்வாறு குறைக்க முடியும் என்பதையும் உங்களது குழந்தை பிறக்கும் போது HIV-யுடன் இருக்கிறது என்பதை குழந்தை HIV பரிசோதனை மூலம் மருத்துவர் எவ்வாறு கூறமுடியும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

HIV என்பது என்ன?

HIV என்பது ஹியூமன் இம்யூனோடெஃபிசியன்சி வைரசைக் குறிக்கிறது. HIV, நோயெதிர்ப்புத் தொகுதியின் சில கலன்களைத் தாக்கும் வைரசாகும். காலப் போக்கில் இது நோயெதிர்ப்புத் தொகுதியைப் பலவீனமடையச் செய்கிறது. இதனால் வேறு கடுமையான தொற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்தை ஒருவருக்கு ஏற்படுத்திவிடுகிறது.

HIV தொற்றுநோய் உள்ளவர்கள் HIV-பொசிடிவ் என்று அழைக்கப்படுகிறார்கள். HIV தொற்றுநோய் இல்லாதவர்கள் HIV-நெகடிவ் என்று அழைக்கப்படுகிறார்கள்.

HIV உள்ள பிள்ளைகளில் அநேகமானோர் தொற்றுநோயுள்ள தங்கள் தாய்மாரிடம் இருந்துதான் இதைப் பெற்றிருக்கிறார்கள். கர்ப்பத்தின்போது, பிறப்பின்போது, தாய்ப்பாலூட்டுதல் மூலம் குழந்தைக்கு HIV கடத்தப்படுகிறது. நீங்கள் HIV-பொசிடிவ்வாக இருந்து ஒரு பிள்ளையைப் பெற்றெடுக்கப் போகிறீர்கள் என்றால், குழந்தைக்கு HIV தொற்றுவதற்கான அபாயத்தைக் குறைத்தல் மற்றும் உங்கள் குழந்தைக்கு இந்த நோய் இருக்கிறதா என்பதை பற்றிய விளக்கத்தை இந்தப் பக்கம் தருகிறது.

பிறப்பிற்கு முன்பு, பிறப்பின் போது மற்றும் பிறப்பின் பின் உங்களுக்கு நல்ல பராமரிப்பு கிடைத்தால் உங்கள் குழந்தைக்கு HIV தொற்றுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும்.

கர்ப்பமாக இருக்கும் எல்லாப் பெண்களும் அல்லது கர்ப்பம் அடைவதைப் பற்றி சிந்திக்கும் பெண்களும் HIV பரிசோதனை ஒன்றைச் செய்யவேண்டும்.

HIV உள்ள கர்ப்பமான பெண் தனது கர்ப்ப காலத்தின்போது அல்லது பிள்ளைப் பிறப்பின்போது மருந்து உட்கொள்ளாவிட்டால், குழந்தைக்கு தொற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் 25% ஆகும். அதாவது 4 குழந்தைகளில் ஒன்றிற்கு தொற்றுநோய் ஏற்படும்.

கீழ்க்காணும் அனைத்து நிலைமைகளும் நடைபெறும்போது குழந்தைக்கு HIV தொற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் கணிசமான அளவு குறைகின்றன:

  • உங்கள் கர்ப்பத்தின் 3 மாதங்களுக்குப் பின்பு நீங்கள் மருந்து உட்கொள்கின்றீர்கள் மற்றும் கண்டுபிடிக்கப்பட முடியாத வைரஸ் தொகை உங்களுக்கு இருக்கிறது. அதாவது உங்கள் இரத்தத்தில் HIV வைரஸ் அவ்வளவு குறைவாக இருப்பதால் அது பரிசோதனை ஒன்றில் தெரிய வருவதில்லை.
  • பிள்ளைப் பிரசவத்தின்போது, நரம்பு வழியாக (IV), சைடோவூடைன் (AZT) எனும் மருந்து உங்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் மருந்து நரம்பினூடாக நேரடியாக இரத்தத்தைச் சென்றடைகிறது.
  • பிறப்பின் பிறகு, உங்கள் குழந்தை AZT மருந்தை 6 வாரங்களுக்கு எடுக்கின்றது.

இந்த எல்லாக் காரியங்களும் செய்யப்பட்டால், உங்கள் குழந்தைக்கு நோய் தொற்றுவதற்கான சாத்தியம் 1% க்கும் குறைவானதாகும். அதாவது 100 குழந்தைகளில் 1 க்கும் குறைவானவர்களுக்குத்தான் தொற்று நோய் ஏற்படுகிறது.

மேலதிக தகவலுக்கு, தயவுசெய்து "HIV யும் கர்ப்பமும்" ஐக் காண்க.

உங்கள் குழந்தைக்கு HIV க்கான பரிசோதனை தேவை

வெறுமனே உங்கள் குழந்தையைப் பார்ப்பதன் மூலம் அவனுக்கு HIV இருக்கின்றதா என மருத்துவரால் சொல்ல முடியாது. அநேகமான சந்தர்ப்பங்களில் HIV உள்ள குழந்தைகள் HIV இல்லாத குழந்தைகளைப் போல்தான் தோற்றமளிக்கிறார்கள். ஒரு குழந்தை வேறு தொற்றுநோய்களால் பீடிக்கப்பட்டால், இது HIV யுடன் தொடர்புடையதாக இருக்கலாம். அல்லது HIV இல்லாவிட்டால்கூட பிள்ளைக்கு ஏற்படக்கூடிய நோயாக இது இருக்கலாம். 

HIV க்கான பரிசோதனைகள்

பிறந்த உடனேயே குழந்தையின் இரத்தத்தை உங்கள் குழந்தையின் மருத்துவர் பரிசோதிக்கவேண்டும், அத்துடன் உங்கள் குழந்தைக்கு ஒரு மாதமாகும்போது மற்றும் 2 மாதமாகும்போது என மேலும் இரண்டு தடவைகள் பரிசோதிக்க வேண்டும். இந்தப் பரிசோதனை பொலிமரேஸ் செயின் ரியாக்க்ஷன் அல்லது PCR எனப்படும். இது குழந்தையின் இரத்தத்தில் HIV இருக்கின்றதா எனப் பார்ப்பதாகும். பரிசோதனையின் அறிக்கையைப் பெற்றுக்கொள்ள சுமார் 1 மாதம் எடுக்கும். PCR பரிசோதனை எந்த வைரசையும் காட்டாவிட்டால் உங்கள் பிள்ளைக்கு HIV தொற்றவில்லை.

பெரியவர்களுக்கும் வளர்ந்த பிள்ளைகளுக்கும், வழக்கமான HIV பரிசோதனை என்பது ஒரு பிற பொருள் எதிரி பரிசோதனையாகும். தொற்றுநோய்களைக் எதிர்த்துப்போராட நோயெதிர்ப்புத் தொகுதி பிற பொருள் எதிரிகளை உருவாக்குகிறது. ஒரு பிள்ளைக்கு ஒரு தொற்றுநோய் இருக்கும்போது அல்லது பிள்ளைக்கு வக்சீன் ஒன்று கொடுக்கப்படும்போது அந்தத் தொற்றுநோய்க்கான பிறபொருள் எதிரிகளை உடல் உற்பத்திசெய்கிறது. ஒருவருடைய இரத்தத்தில் HIV க்கான பிற பொருள் எதிர்கள் இருக்குமானால், அவருக்கு HIV இருக்கின்றாதென இது பொதுவாக அர்த்தப்படுத்தும். எனவே பிறபொருள் எதிர்ப் பரிசோதனை என்பது இரத்தத்தில் HIV பிறபொருள் எதிரியைக் காண்பதற்காக செய்யப்படுகிறது. HIV பிறபொருள் எதிரிகள் ஒருவரை HIV யிலிருந்து பாதுகாக்காது.

குழந்தைகளுக்கு பிறபொருள் எதிரிப் பரிசோதனை பயனற்றது. ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது அவள் தன்னுடைய சொந்த பிறபொருள் எதிரிகளில் சிலவற்றை தனது பிள்ளைக்கு கடத்திவிடுகிறாள். பெண்ணுக்கு HIV இருக்குமானால், குழந்தைக்கு HIV இல்லாத பொழுதிலும்கூட, பிறபொருள் எதிர் பரிசோதனையானது குழந்தையின் இரத்தத்தில் HIV பிற பொருள் எதிரிகள் இருப்பதை எப்போதும் காண்பிக்கும். இந்தக் காரணத்திற்காக குழந்தையின் இரத்தத்தில் வைரஸ் இருக்கின்றதா எனக் கண்டறிய PCR பரிசோதனைதான் செய்யப்பட வேண்டும்.

HIV பிறபொருளெதிரிகள் பனிக்குடத்தைக் கடக்கும்HIV பிறபொருளெதிரிகள் பனிக்குடத்தைக் கடக்கும்
பனிக்குடத்தினுள் இருக்கும் குழந்தையின் இரத்தத்தோடு தாயின் இரத்தம் கலப்பதில்லை. தாயின், HIV க்கு எதிரான பிறபொருளெதிரிகள் பனிக்குடத்தைக் கடக்க முடியும் ஆனால்  HIV வைரசுகள் வழக்கமாக கடக்க முடிவதில்லை.  அதனால் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் பிறபொருளெதிரி பரிசோதனை, HIV இருக்கின்றதா என்பதை திருத்தமாக காண்பிக்க மாட்டாது.

உங்கள் குழந்தை AZT மருந்தை உட்கொள்ளவேண்டும்.

வாய் மூலம் மருந்து கொடுத்தல்மருந்தூசி ஒன்றின் ஊடாக குழந்தை மருந்து பெறுதல்

உங்கள் குழந்தை பிறந்தவுடன் முதல் நாளுக்குள் அதாவது குழந்தை பிறந்த 24 மணிநேரத்திற்குள் AZT மருந்து ஆரம்பிக்கப்படும். இந்த மருந்தை நாளொன்றுக்கு 4 தடவைப்படி வாழ்வின் முதல் 6 வாரங்களுக்கு குழந்தைக்குக் கொடுக்கவேண்டும். HIV தொற்றும் அபாயத்தை இது குறைக்கும்.

இந்த மருந்தை எப்படிக் கொடுப்பதென ஒரு தாதி அல்லது சுகநல ஊழியர் ஒருவர் உங்களுக்குக் காண்பிப்பார்.

உங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலூட்ட வேண்டாம்

உங்களுக்கு HIV இருந்தால், உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவேண்டாம். HIV யானது தாயிலிருந்து பிள்ளைக்கு கடத்தப்படும் ஒரு வழி முலைப்பாலூட்டுதல் மூலமாகும். கனடாவிலும் ஏனைய வளர்ச்சியடைந்த நாடுகளிலும் பிள்ளைக்கு ஊட்டச் சத்தை வழங்குவதற்கு பாதுகாப்பான வழி ஃபோர்மூலா பாலாகும். HIV-பொசிடிவ் தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இலவசமான ஃபோர்மூலாப் பாலை முதல் வருடத்தில் வழங்குவதற்கென ஒரு திட்டம் ஒன்டாரியோவில் இருக்கின்றது. தெரேசா குரூப்பை அழைப்பதன் மூலம் இந்தத் திட்டத்திலிருந்து பயனடையவும். நீங்கள் ஒன்டாரியோவுக்கு வெளியே வசிப்பவரானால், இலவச ஃபோர்முலாக்களை வழங்கும் திட்டங்கள்பற்றி உடல் நலப் பராமரிப்பு வழங்குவோரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவும்.

மருந்தினால் உங்கள் குழந்தைக்கு பக்கவிளைவுகள் தோன்றலாம்

HIV பரிசோதனை எதிர்மறையாக அதாவது நெகடிவ்வாக இருந்தால்கூட மருந்துகள் குறுகியகால அல்லது நீண்ட காலப் பிரச்சினைகளைக் குழந்தைக்கு ஏற்படுத்துகின்றதா என மருத்துவர் தொடர் கண்காணிப்புச் செய்வார். கர்ப்பவதிகளுக்குக் கொடுக்கப்படும் மருந்து மிகவும் பாதுகாப்பானது. சில வேளைகளில் ஒரு சில குறுகியகால பக்கவிளைவுகள் தோன்றலாம்.

மிட்டோகோன்ட்றியாகலங்களில் இழைமணியை அடையாளப்படுத்தல்
விசேஷ இயக்கம் கொண்டுள்ள  ஓர்கனெல்லெஸ் எனப்படும் நுண்மங்களை கலன்கள் கொண்டுள்ளன. மிட்டோகோன்ட்ரியா என்பது சக்தியை உற்பத்தி செய்யும் ஒர்கனெல்லாசாகும்.
  • பிறப்பின் பின் உங்கள் குழந்தையில் AZT மருந்து இரத்தச் சோகையைத் தோற்றுவிக்கலாம். இரத்தச்சோகை என்பது உங்கள் குழந்தையின் இரத்தத்தில் போதிய அளவு சிவப்பணுக்கள் இன்மையாகும். சிவப்பணுக்கள்தான் உடலின் மற்றப்பகுதிகளுக்கு ஒக்சிசனை காவிச் செல்கின்றன.
  • AZT மருந்து மிட்டோக்கோன்ட்ரியாவையும் பாதித்து குழந்தையின் இரத்தத்தில் அல்லது ஈரலில் சிக்கல்களைத் தோற்றுவிக்கலாம். உங்கள் உடலில் உள்ள எல்லாக் கலன்களிலும் மிட்டோக்கோன்ட்ரியா காணப்படுகின்றது. இவை கலன்களில் சக்தியை உற்பத்திசெய்ய உதவுகின்றன. 

எந்த இரத்தசோகை நிலையும் மிட்டோக்கோன்ட்ரியா பாதிப்பும் AZT மருந்து நிறுத்தப்பட்டவுடன் பொதுவாக மாறிவிடுகின்றன.

இதுவரை, இந்த மருந்துகளை எடுப்பது எந்த ஒரு பாரிய நீண்ட காலத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என ஆய்வுகள் காண்பிக்கின்றன. இந்த மருந்துகளைப் பாவிக்கும் பிள்ளைகள் சாதாரணமானவர்களாகவே இருக்கிறார்கள் எனவும் இந்த ஆய்வுகள் காண்பிக்கின்றன.

உங்கள் குழந்தையின் வளர்ச்சியை ஒழுங்கான முறையில் நாங்கள் மதிப்பீடுசெய்வோம். அக்கறைக்குரிய நிலைகள் தோன்றினால், நாங்கள் ஆலோசனைகள் வழங்குவோம் அல்லது உங்கள் பிள்ளைக்கான வேறு திட்டங்களுக்கு வழிகாட்டுவோம்.

உங்கள் குழந்தையின் HIV பரிசோதனை பொசிடிவ் என்றால்

கனாடாவில், பிள்ளைகள் உடல் நலப் பராமரிப்புக்காக ஒழுங்காக கிளினிக்கிற்குச் சென்று மற்றும் வழங்கப்படுகின்ற மருந்துகளை உட்கொண்டால், HIV உள்ள பிள்ளைகள் ஆரோக்கியமான சாதாரணமான ஒரு வாழ்வை கொண்டிருக்க முடியும். உங்கள் குழந்தைக்கு நோயிருப்பது ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டால் அவனை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு, தேவைப்பட்டால் மருந்துகளை உடனடியாக ஆரம்பிக்கவும் மருத்துவரால் முடியும்.

மேலதிகத் தகவலுக்கு, தயவுசெய்து "HIV யும் உங்கள் பிள்ளையும்" ஐ வாசியுங்கள்.

HIV யும் கர்ப்ப மூலவளங்களும்

உங்களுக்கு ஏதாவது கேள்விகள் அல்லது கரிசனைகள் இருந்தால், உங்கள் குழந்தையின் மருத்துவரை அல்லது HIV கிளினிக்கைத் தொடர்புகொள்ளுங்கள்.

மேலதிக தகவலுக்கு, தயவுசெய்து பின்வருவனவற்றைக் காண்க:

மதரிஸ்க்

www.motherisk.org (ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கும்)

டெரெசா குரூப்

www.teresagroup.ca (ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கும்)

416-596-7703

முக்கிய குறிப்புகள்

  • கர்ப்பத்தின் அல்லது பிரசவத்தின்போது தாய் மருந்தைப் பெற்றுக்கொள்ளாவிட்டால் HIV-பொசிடிவ்வாக உள்ள தாய்மார்களுக்குப் பிறக்கும் 4 குழந்தைகளில் ஒன்றிற்கு HIV தொற்றிவிடும்.
  • குழந்தை தாய் ஆகிய இருவருக்கும் மருந்துகொடுப்பதானது பிள்ளையும் HIV பெற்றுவிடும் ஆபத்தைக் குறைக்கும்.
  • மருந்துகள் ஏதாவது பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றனாவா என்பதைக் கண்காணிக்க உங்கள் குழந்தைக்கு தொடர் பராமரிப்புத் தேவை.
Last updated: دسمبر 17 2009