சிறுநீர் வடிகுழாய் உட்புகுத்துதல்: வீட்டில் பராமரிப்பு

Urinary catheter: Care at home [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

சிறுநீர் வடிகுழாய்கள் சரியான முறையில் வேலை செய்வதற்கு ஒழுங்கான சுத்தப்படுத்தலும் தண்ணீரைப் பாய்ச்சிக் கழுவுவதும் தேவைப்படுகிறது.

உங்கள் பிள்ளை ஒரு சிறுநீர் வடிகுழாயுடன் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்திருக்கிறான். வடிகுழாய் என்பது ஒரு மெல்லிய குழாயாகும். ஒரு சிறுநீர் வடிகுழாய் உங்கள் பிள்ளையின் சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீரை உடலுக்கு வெளியே வடியவிடுகிறது.

உங்கள் பிள்ளையின் வடிகுழாயை வீட்டில் பராமரிப்பதற்கு நீங்கள் செய்யவேண்டிய சில காரியங்கள் இருக்கின்றன. பெற்றோரும் வயதுவந்த பிள்ளைகளும் வடிகுழாயை எப்படிப் பராமரிப்பது என்பது பற்றிக் கற்றுக்கொள்ளலாம். அதை எப்படிச் செய்வது என்பது பற்றி உங்கள் பிள்ளை வீடு திரும்புவதற்குமுன்னால், ஒரு தாதி உங்களுக்கக் காண்பித்துக் கொடுப்பார். என்ன செய்யவேண்டும் என்பதை இந்தப் பக்கமும் உங்களுக்கு விளக்கும்.

வித்தியாசமான சிறுநீர் வடிகுழாய்கள் இருக்கின்றன. அவை பின்வருமாறு:

  • ஒரு ஃபோலி வடிகுழாய், சிறுநீரை வெளியேற்றும் குழாயி(சிறுநீர் வடிகுழாய்)னூடாக உங்கள் பிள்ளையின் சிறுநீர்ப்பைக்குட் செல்லுகிறது.
  • ஒரு சுப்ராபியூபிக் வடிகுழாய், வயிற்றிலுள்ள ஒரு வெட்டினூடாக உங்கள் பிள்ளையின் சிறுநீர்ப்பைக்குட் செல்லுகிறது.

இந்த இரண்டு வடிகுழாய்களையும் நீங்கள் ஒரே மாதிரியாகப் பராமரிக்கவேண்டும்.

ஒரு மருத்துவர் அல்லது தாதியைத் தேவைப்படுத்தும் வடிகுழாய்ப் பிரச்சினைகள்

உங்களால் பராமரித்துக்கொள்ளமுடியாத சில வடிகுழாய்ப் பிரச்சினைகள் இருக்கின்றன. பின்வரும் பிரச்சினைகளுக்கு ஒரு மருத்துவர் அல்லது தாதி தேவைப்படும்:

  • வடிகுழாய் வெளியே வந்துவிட்டால், அதை நீங்களாகவே திரும்பவும் உள்ளே வைக்க முயற்சி செய்யாதீர்கள். அதற்குப் பதிலாக, உடனே மருத்துவமனையிலிருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லவும்.
  • வழக்கமாக, வடிகுழாயினூடே ஒரு மெதுவான, நிதானமான சிறுநீர் வடிதல் இருக்கவேண்டும். வழக்கத்துக்கு மாறாக, மிகவும் குறைவாக சிறுநீர் வடிந்தால் உங்கள் பிள்ளையின் அறுவை மருத்துவர் அல்லது மருத்துவமனையில் சிறுநீரகவியல் பிரிவில் பணியில் இருப்பவரை அழைக்கவும்.
  • உங்கள் பிள்ளையின் சிறுநீரில் நிறமாற்றத்தை நீங்கள் அவதானித்தால் உங்கள் பிள்ளையின் அறுவை மருத்துவர் அல்லது சிறுநீரகவியல் பிரிவில் பணியில் இருப்பவரை அழைக்கவும்.
  • உங்கள் பிள்ளைக்கு காய்ச்சல் அல்லது குளிர் நடுக்கம் இருந்தால், சிறுநீரகவியல் பிரிவில் பணியிலிருப்பவரை அழைக்கவும்.

முக்கியமான தொலைபேசி எண்கள்

உங்கள் பிள்ளையின் அறுவை மருத்துவர்:

பணியிலிருக்கும் சிறுநீரகவியல் மருத்துவர்:

வடிகுழாயை எப்படிப் பராமரிக்கவேண்டும்

  • ஒவ்வொரு நாளும் உங்கள் பிள்ளையை குறந்தது 6 முதல் 8 கிளாஸ் நீராகாரங்கள் குடிக்க வைக்க முயற்சிக்கவும்.
  • வடிகுழாய் அல்லது சிறுநீரைத் தொடுவதற்கு முன்பும் பின்பும் உங்கள் கைகளை சோப்பு மற்றும் தண்ணீரால் கழுவவும்.
  • ஒழுகுதல், வளைதல், அல்லது முறுகுதல் போன்ற பிரச்சினைகளுக்காக வடிகுழாயை ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை சரி பார்க்கவும்.
  • உங்கள் பிள்ளையின் வடிகுழாயை வார்ப்பட்டையிட்டு சரியான இடத்தில் உறுதியாக வைக்கவும்.நீங்கள் மருத்துவமனையை விட்டுப் போவதற்கு முன்னர் உங்கள் தாதி இதை எப்படிச் செய்யவேண்டும் என்பதைக் காண்பிப்பார்.
  • நீங்களாகவே வடிகுழாயை வெளியே எடுக்கவோ அல்லது உள்ளே வைக்கவோ ஒரு போதும் முயற்சிக்கவேண்டாம்.
  • வடிகுழாய் பையை எப்போதும் உங்கள் பிள்ளையின் சிறுநீர்ப்பைக்குத் தாழ்வாக வைக்கவும்.
  • ஒரு நாளில் குறைந்தது 2 முறைகளாவது சிறுநீர் வடி குழாய்ப் பையை வெறுமையாக்கவும்.
  • வடிகுழாயைச் சுற்றியிருக்கும் உங்கள் பிள்ளையின் தோலை ஒவ்வொரு நாளும் சுத்தம் செய்யவும். சுத்தமான திசுப் பேப்பர் மற்றும் பெத்தடின் போன்ற பொவிடோன்-அயோடின் கரைசலை உபயோகிக்கவும். பெத்தடின் கிடைக்காவிட்டால்,சோப்பு மற்றும் தண்ணீரை நீங்கள் உபயோகிக்கலாம். பெத்தடினை 1 நிமிடம் உலரவிடவும். பின்பு அதைத் தண்ணீரால் கழுவி விடவும்.
  • உங்கள் பிள்ளையின் மருத்துவர் எழுதிக்கொடுத்தபடியே எல்லா மருந்துகளையும் அவனுக்குச் சரியாகக் கொடுக்கவும்.
  • உங்கள் பிள்ளையின் மருத்துவர் கூறியபடியே அவனது வடிகுழாயை தண்ணீர் பாய்ச்சிக் கழுவவும்.

உங்கள் பிள்ளையின் வடிகுழாய் தண்ணீர் பாய்ச்சிக் கழுவப்படவேண்டும்.

அவ்வப்போது, உங்கள் பிள்ளையின் வடிகுழாய் தண்ணீர் பாய்ச்சிக் கழுவப்பட (அலசப்பட) வேண்டும். இது சிறுநீர் தாராளமாக வடிய உதவிசெய்யும்.

பொற்றோர்களும் வயதுவந்த பிள்ளைகளும் வடிகுழாயை வீட்டில் எப்படி தண்ணீர் பாய்ச்சிக் கழுவுவது என்பதைப் பற்றிக் கற்றுக் கொள்ளலாம்.

உங்கள் பிள்ளையின் வடிகுழாயை பின்வரும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரணங்களுக்காக நீர் பாய்ச்சிக் கழுவ வேண்டும்:

  • உங்கள் பிள்ளைக்கு சிறுநீர்ப்பை தசைசுருங்குதல் இருந்தால்
  • வடிகுழாய் வழியே சிறுநீர் வடிந்தோடுவது நிறுத்தப்பட்டு விட்டால்,
  • சிறுநீரில் சீதம் இருந்தால்

சில பிள்ளைகளுக்கு அடிக்கடி அவர்களது வடிகுழாயை நீர்பாய்ச்சிக் கழுவவேண்டிய தேவை இருக்கிறது மற்றும் அதற்காக நேரத்தை நிர்ணயிக்கவேண்டியவர்களாயிருக்கிறார்கள். உங்கள் பிள்ளைக்கும் இது பொருந்துமானால், மருத்துவர் நீங்கள் பின்பற்றவேண்டிய ஒரு கால அட்டவணையை உங்களுக்குத் தருவார்.

உங்கள் பிள்ளையின் வடிகுழாயை எப்போது நீர்பாய்ச்சிக் கழுவவேண்டும் என்பதை எழுதுவதற்காக இந்த இடைவெளியை உபயோகிக்கவும்:

 

 

 

உங்கள் பிள்ளையின் வடிகுழாயை எப்படி நீர்பாய்ச்சிக் கழுவவேண்டும் என்பதை ஒரு தாதி உங்களுக்குக் கற்றுக் கொடுப்பார்

உங்கள் பிள்ளை மருத்துவமனையை விட்டு வீட்டுக்குச் செல்வதற்கு முன்பாக, வடிகுழாயை எப்படி நீர்பாய்ச்சிக் கழுவவேண்டும் என்பதைத் தாதி உங்களுக்குக் கற்பிப்பார்.

உங்களுக்கு விசேஷ உபகரணங்கள் தேவைப்படும்

உங்கள் பிள்ளையின் வடிகுழாயை ஒவ்வொரு முறையும் நீர்ப்பாய்ச்சிக் கழுவுவதற்குப் பின்வரும் உபகரணங்கள் தேவைப்படலாம்:

  • அற்ககோலில் தோய்க்கப்பட்ட ஒரு பஞ்சொற்றி
  • சாதாரண சேலைன் கரைசல் என்றழைக்கப்படும் ஒரு விசேஷ உப்புநீர்
  • கூரான முனையையுடைய 60 மிலி பீச்சாங்குழல்
  • ஒரு பேப்பர் டவல் அல்லது வேறு சுத்தமான துவாய்

உங்கள் பிள்ளை வீடு திரும்புவதற்கு முன்னர், உங்களை மருத்துவமனையிலிருந்து விடுவிக்கத் திட்டமிடுபவர் இந்த உபகரணங்களை நீங்கள் பெற்றுக்கொள்ள உதவி செய்வார்.

வடிகுழாயை நீர்ப்பாய்ச்சி சுத்தம் செய்வதற்கு, பின்வரும் படிகளைப் பின்பற்றவும்:

  1. சவர்க்காரம் மற்றும் நீர் பாவித்துக் கைகளைக் கழுவுதல்

    உங்கள் கைகளை சோப்பு மற்றும் தண்ணீரினால் கழுவவும். உங்களுக்குத் தேவையான உபகரணங்களை ஒன்று சேர்க்கவும்.

  2. கிருமியழிக்கப்பட்ட பீச்சாங்குழாய்(சிரிஞ்) இருக்கும் பெட்டியைத் திறந்து 30 மிலி சாதாரண சேலைன் கரைசலை அதனுள் எடுக்கவும். பீச்சாங்குழாயின் முனை கிருமியழிக்கப்படுவதற்காக அதன் முனையைத் திரும்பவும் பெட்டிக்குள் வைக்கவும். பீச்சாங்குழாயின் முனை எதையுமே தொடுவதற்கு அனுமதிக்க வேண்டாம்.
  3. அற்ககோல் ஒற்றியால் சிறிய, ஒடுங்கிய குழாயின் (catheter) தொடர்புப் பகுதியைச் சுத்தம்செய்தல்

    சிறுநீர் வடியும் குழாயுடன் வடிகுழாயைப்(கதீற்றர்) பொருத்தும் இடத்திற்குக்கீழ் ஒரு சுத்தமான துவாயை அதன் கீழே வைக்கவும். பொருத்தப்படும் பகுதியைத் துடைப்பதற்காக ஒரு அற்ககோல் பஞ்சொற்றியை உபயோகிக்கவும்.

  4. வடிகால் குழாயிலிருந்து சிறிய, ஒடுங்கிய குழாயின் தொடர்பை நீக்கல்

    உங்கள் பெருவிரல் மற்றும் சுட்டுவிரலுக்கிடையின் வடிகுழாயைப் பிடிக்கவும். சிறுநீர் வடிகுழாயிலிருந்து அதன் தொடர்பைத் துண்டித்துவிடவும். குழாயின் மறுமுனையை சுத்தமான துவாயில் வைக்கவும்.

  5. உட்செலுத்தி ஒன்றால் சேலைன் கரைசலைச் சிறிய, ஒடுங்கிய குழாயினுள் செலுத்தல்

    கிருமியழிக்கப்பட்ட பீச்சாங்குழாயை வடிகுழாயின் மறுமுனையுடன் இணைக்கவும். சாதாரண சேலைன் கரைசல் முழுவதும் வடிகுழாயூடாகச் செல்லக்கூடியவாறு தண்டை மெதுவாக உள்ளே தள்ளவும். சாதாரண சேலைன் கரைசல் முழுவதும் உள்ளே சென்றவுடன், அது முழுவதையும் வெளியே எடுப்பதற்காகத் தண்டை மெதுவாக வெளியே இழுக்கவும்.

  6. சிறிய, ஒடுங்கிய குழாயின் நுனியை அற்ககோல் ஒற்றியால் சுத்தம்செய்தல்

    வடிகுழாயின் முனையை ஒரு அற்ககோல் பஞ்சொற்றியால் சுத்தமாக்கவும். சிறுநீர் வடிகுழயின் முனயையும் ஒரு அற்ககோல் பஞ்சொற்றியால் சுத்தமாக்கவும்.

  7. சிறுநீர் வடியும் குழாயை வடிகுழாயுடன் இணைத்துவிடவும். உங்கள் கைகளைத் திரும்பவும் கழுவவும்.

பீச்சாங்குழாய்த் தண்டை வெளியே இழுப்பதில் கஷ்டமிருந்தால்

பீச்சாங்குழாய்த் தண்டை வெளியே இழுக்க அழுத்தத்தை உபயோகிக்க வேண்டாம். இது உங்கள் பிள்ளையின் சிறுநீர்ப்பையில் காயத்தை ஏற்படுத்தலாம். அதற்குப் பதிலாக, மெதுவாக இழுக்க திரும்பவும் முயற்சி செய்யவும்.

அதை வெளியே இழுப்பதில் மேலும் கஷ்டமிருந்தால்

உங்கள் பிள்ளையின் வடிகுழாயை திரும்பவும் சிறுநீர் வடிகுழாயுடன் பொருத்தவும். சிறுநீர் நன்றாகப் பாயும் வரை கண்காணிக்கவும்.

  • சிறுநீர் நன்றாகப் பாய்ந்தால், அடுத்த அட்டவணை நேரத்தில் திரும்பவும் நீர்பாய்ச்சிக் கழுவவும்.
  • சிறுநீர் நன்றாகப் பாயாவிட்டால் உடனே உங்கள் பிள்ளையை மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டுவரவும். உங்கள் பிள்ளையின் சிறுநீரக மருத்துவர் உங்களை வேறு ஏதாவது செய்யும்படி சொன்னால், அவர் சொன்னதைச் செய்யவும்

உங்கள் பிள்ளையின் சிறுநீரக மருத்துவரிடமிருந்து வரும் விசேஷ அறிவுறுத்தல்கள் ஏதாவதிருந்தால் அவற்றைக் கீழே எழுதவும்:

 

 

 

மருத்துவமனையை எப்போது அழைக்கவேண்டும்

பின்வரும் 3 காரியங்கள் சம்பவித்தால் மருத்துவமனையை அழைத்து பணியிலிருக்கும் சிறுநீரக மருத்துவருடன் பேசவும்:

  • சாதாரண சேலைன் கரைசலை உங்களால் வடிகுழாயினுள் உட்புகுத்த முடியவில்லை.
  • 1 மணிநேரத்துக்கு மேலாக வடிகுழாயினூடாக சிறுநீர் எதுவுமே வரவில்லை.
  • உங்களால் பார்க்கக்கூடியவரை, வடிகுழாய் முறுக்கப்பட்டிருக்கவில்லை.

முக்கிய குறிப்புகள்

  • ஒரு சிறுநீர் வடிகுழாய் என்பது சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீரை உடலுக்கு வெளியே வடியவிடும் ஒரு மெல்லிய குழாய் ஆகும்.
  • வீட்டில் ஒரு சிறுநீர் வடிகுழாயை எப்படிப் பராமரிக்கவேண்டும் என்பதைப் பற்றிப் பெற்றோரும் வளர்ந்த பிள்ளைகளும் கற்றுக்கொள்ளலாம்.
  • வடிகுழாய் நீர்பாய்ச்சிக் கழுவப்பட (அலசப்பட) வேண்டும். வடிகுழாயினூடாக சிறுநீர் தடையின்றி வடிவதற்கு நீர்பாய்ச்சிக் கழுவுதல் ஒரு வழியாகும்.
  • வடிகுழாயை நீங்களாகவே உள்ளே தள்ளவோ அல்லது வெளியே இழுக்கவோ ஒருபோதும் முயற்சி செய்யவேண்டாம். உங்கள் பிள்ளையின் வடிகுழாய் வெளியே வந்துவிட்டால், அவனை உடனே அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லவும்.
  • நீங்கள் நீர்பாய்ச்சிக் கழுவிய பின்னர் சிறுநீர், வடிகுழாயினூடு வடியாவிட்டால்,உடனே உங்கள் பிள்ளையை அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லவும்.
  • சிறுநீர் பாய்வது மெதுவானால் அல்லது நிறுத்தப்பட்டுவிட்டால்; உங்கள் பிள்ளையின் சிறுநீரில் நிற மாற்றத்தை நீங்கள் அவதானித்தால்; அல்லது உங்கள் பிள்ளைக்குக் காய்ச்சல் அல்லது குளிர் நடுக்கம் இருந்தால், உங்கள் பிள்ளையின் அறுவைச் சிகிச்சை மருத்துவர் அல்லது பணியிலிருக்கும் சிறுநீரக மருத்துவரை அழைக்கவும்.
Last updated: November 10 2009