ஒமெப்ரஸோல் (Omeprazole)

Omeprazole [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

உங்கள் பிள்ளை ஒமெப்ரஸோல் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். ஒமெப்ரஸோல் மருந்து என்ன செய்கிறது, இதை எப்படிக் கொடுக்கவேண்டும்.

உங்கள் பிள்ளை ஒமெப்ரஸோல் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். ஒமெப்ரஸோல் மருந்து என்ன செய்கிறது, இதை எப்படிக் கொடுக்கவேண்டும், உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும் என்பன பற்றி இந்தத் தகவல் தாள் விபரிக்கும்.

இந்த மருந்து எப்படிப்பட்டது?

ஒமெப்ரஸோல் என்பது வயிறு, குறைந்தளவு அமிலத்தைச் சுரக்க உதவும் ஒரு மருந்து. எதிர்த்தாக்க நோய்கள், தொண்டை அல்லது வயிற்று உட்படையில் வீக்கம், அல்லது வயிற்றுக்குள் இரத்தக் கசிவு போன்றவை உள்ள நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்வதற்கு இது உபயோகிக்கப்படுகிறது. வயிற்றுப் புண்ணுக்குச் சிகிச்சை செய்வதற்காக அன்டிபையோடிக் மருந்துகளுடனும் உபயோகிக்கப்படும். ஒமெப்ரஸோல் மருந்து, லோசெக்® என்ற அதனது வர்த்தகச் சின்னப்பெயரால் அழைக்கப்படுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். ஒமெப்ரஸோல் மருந்து மாத்திரைகள், கப்சியூல்கள், அல்லது திரவ வடிவங்களில் கிடைக்கும்.

இந்த மருந்தை உங்கள் பிள்ளைக்குக் கொடுப்பதற்கு முன்பு

உங்கள் பிள்ளைக்கு ஒமெப்ரஸோல் மருந்துக்கு ஒவ்வாமை இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் தெரிவிக்கவும்.

உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் நிலைமைகளில் ஏதாவது இருந்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் பேசவும். உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் நிலைமைகள் இருந்தால் முன்னெச்சரிக்கைகள் எடுக்கவேண்டும்:

  • கல்லீரல் நோய்: இந்த நிலைமை ஒமெப்ரஸோல் மருந்தை உடலில் தேங்கியிருக்கச் செய்யும்.

உங்கள் பிள்ளைக்கு இந்த மருந்தை எப்படிக் கொடுக்கவேண்டும்?

உங்கள் பிள்ளைக்கு இந்த மருந்தை உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளர் குறிப்பிட்டது போல துல்லியமாக, உங்கள் பிள்ளை நிவாரணமடைந்தாலும் கூட, தொடர்ந்து கொடுக்கவும்.

  • இந்த மருந்தை உணவு உண்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாகக் கொடுக்கவும்.
  • ஒவ்வொரு நாளும் அதே நேரத்தில் இந்த மருந்தைக் கொடுக்கவும்.
  • உங்கள் பிள்ளைக்கு முழு மாத்திரையை அல்லது கப்சியூலை தண்ணீர் அல்லது பழரசத்துடன் கொடுக்கவும்.

உங்கள் பிள்ளை ஒமெப்ரஸோல் திரவ மருந்தை உட்கொள்வதாக இருந்தால், பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றவும்:

  • ஒவ்வொரு வேளைமருந்தைக் கொடுப்பதற்கு முன்பாகவும் ஒமெப்ரஸோல் திரவ மருந்தை நன்கு குலுக்கவும்.
  • மருந்தாளர் உங்களுக்குக் கொடுத்த விசேஷ கரண்டி அல்லது பீச்சாங்குழாயால்(ஸ்ரிஞ்) வேளைமருந்தை அளக்கவும்.
  • உங்கள் பிள்ளையின் வேளைமருந்தை எடுத்தவுடன் ஒமெப்ரஸோல் மருந்துக் குப்பியை உடனே குளிர்ச்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
  • உங்கள் பிள்ளைக்கு ஒமெப்ரஸோல் திரவ மருந்தை ஜி-குழாய் அல்லது என்ஜி- குழாய் மூலமாகக் கொடுப்பதாக இருந்தால், ஒவ்வொரு வேளைமருந்தைக் கொடுத்தவுடன் குழாயைத் தண்ணீரால் பாய்ச்சி அடித்துக் கழுவவும்.
  • உங்கள் பிள்ளைக்குக் கொடுப்பதற்கு முன்னர் ஒமெப்ரஸோல் திரவ மருந்தை ஏதாவது உணவு அல்லது பானத்துடன் ( தண்ணீர் அல்லாத ) கலக்கவேண்டாம். ஒமெப்ரஸோல் மருந்தை தண்ணீர் அல்லாத வேறு எதனுடனாவது கலப்பது ஒமெப்ரஸோல் மருந்தை வேலை செய்யவிடாது தடை செய்யும்.

நீங்கள் மாத்திரை வடிவத்தை உபயோகித்தால் மற்றும் உங்கள் பிள்ளையால் முழு மாத்திரையை விழுங்க முடியாவிட்டால் அல்ல்து மாத்திரையின் ஒரு பகுதி மட்டுமே தேவைப்பட்டால் பின்வரும் படிகளைப் பின்பற்றவும்:

  • சிறிதளவு மென்மையாகும்வரை ஒரு மருந்துக் கோப்பையில் சிறிதளவு நீரினுள் நனைய வைக்கவும்.
  • மேலுறையை உரித்தெடுக்கவும் (இது ஒரு துண்டு பிளாஸ்டிக் போல இப்போது தோற்றமளிக்கும்)
  • மேலுறையை எறிந்து விடவும்.
  • மாத்திரையில் மீதிப் பகுதியை நீரில் கலைய ( பரவ) விடவும்.
  • நன்கு கலக்கவும்.
  • மருந்தை உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவும்.

உங்கள் பிள்ளைக்கு ஓமெப்ரஸோல் மருந்துடன் அமில நீக்கி மருந்தை எப்போது கொடுக்கவேண்டும்?

  • உங்கள் பிள்ளைக்கு நசுக்கப்பட்ட அல்லது உடைக்கப்பட்ட ஒரு மாத்திரையை வாய் வழியாகக் கொடுப்பதானால், ஒமெப்ரஸோல் மருந்து தகுந்த முறையில் வேலை செய்வதற்காக ஒரு அமில நீக்கி மருந்தையும் கொடுக்கவேண்டும். உங்கள் பிள்ளைக்கு ஒரு மாத்திரையை ஜீ- குழாய் அல்லது என்ஜீ- குழாய் மூலமாகக் கொடுப்பதானால், அவனு(ளு)க்கு ஒரு அமில நீக்கி மருந்தையும் கொடுக்கவேண்டும்.
  • ஒமெப்ரஸோல் மருந்து அமிலம் இல்லாதிருக்கும்போது மிகச் சிறந்த முறையில் வேலைசெய்யும். வயிற்றுக்குள் அமிலம் இருக்கிறது. ஒமெப்ரஸோல் மாத்திரையிலிருக்கும் இளஞ் சிவப்பு நிற மேற்பூச்சு, வயிற்றிலுள்ள அமிலத்திலிருந்து அதைப் பாதுகாக்க உதவி செய்கிறது. மாத்திரை உடைந்து போனால் அல்லது மேற்பூச்சு உரிந்து போனால் பாதுகாப்பும் போய்விடும்.
  • இளஞ் சிவப்பு நிற மேற்பூச்சு அகற்றப்பட்டால், அமில நீக்கி மருந்து ஒமெப்ரஸோல் மாத்திரையை அமிலத்திலிருந்து பாதுகாக்கும்.

ஒவ்வொருவேளை ஒமெப்ரஸோல் மருந்துக்கு 20 முதல் 30 நிமிடங்களுக்கு முன்பாக அமில நீக்கி மருந்தைக் கொடுக்கவும். மாலொக்ஸ்® அல்லது டியோவொல்® போன்ற ஒரு அமில நீக்கி மருந்தை உபயோகிக்கவும். அமில நீக்கி மருந்தை நீங்கள் மருந்துக் கடையில் வாங்கலாம்.

2 வயதுக்குக் குறைவான பிள்ளைகள்2.5 முதல் 5 மிலி வரை கொடுக்கவும்
2 முதல் 12 வயது வரையான பிள்ளைகள்5 முதல் 15 மிலி வரை கொடுக்கவும்
12 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள்15 முதல் 30 மிலி வரை கொடுக்கவும்


உங்கள் பிள்ளை ஒமெப்ரஸோல் மருந்தை உட்கொள்ளத் தொடங்கும் முதல் வாரத்துக்கு, நீங்கள் அமில நீக்கி மருந்தைக் கொடுக்கவேண்டும். உங்கள் மருத்துவர் கொடுக்கவேண்டாம் என சொன்னால் அன்றி நீங்கள் அவ்வாறு செய்ய வேண்டும். எவ்வளவு காலத்துக்கு அமில நீக்கி மருந்தை உபயோகிக்கவேண்டும் என உங்கள் மருத்துவர் உங்களுக்குச் சொல்லுவார்.

  • உங்கள் பிள்ளைக்குச் சிறுநீரகப் பிரச்சினைகள் இருந்தால் , அவனு(ளு)க்கு அமில நீக்கி மருந்தைக் கொடுக்கவேண்டாம் என உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளர் உங்களுக்குச் சொல்லுவார்.
  • உங்கள் பிள்ளைக்கு நசுக்கப்பட்ட அல்லது உடைக்கப்பட்ட ஒரு மாத்திரையை தண்ணீரில் கலந்து ஜீ- குழாய் அல்லது என்ஜீ- குழாய் மூலமாகக் கொடுப்பதாக இருந்தால், ஒரு அமில நீக்கி மருந்தைக் கொடுக்கவேண்டிய அவசியமில்லை.

உங்கள் பிள்ளை வேளை மருந்து ஒன்றைத் தவறவிட்டால் நீங்கள் என்ன செய்யவேண்டும்?

  • உங்களுக்கு ஞாபகம் வந்தவுடனேயே, தவறவிடப்பட்ட வேளை மருந்தைக் கொடுக்கவும்.
  • அடுத்த வேளைமருந்துக்கான நேரம் நெருங்கிவிட்டிருந்தால், தவறவிட்ட வேளைமருந்தைக் கொடுக்காது விடவும். அடுத்த வேளைமருந்தை சரியான நேரத்தில் கொடுக்கவும்.
  • ஒரு தவறவிட்ட வேளைமருந்தை ஈடு செய்வதற்காக இரு வேளைமருந்துகளை ஒரே சமயத்தில் உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவேண்டாம்.

இந்த மருந்து வேலை செய்யத் தொடங்க எவ்வளவு காலம் செல்லும்?

இந்த மருந்துக்கு உங்கள் பிள்ளை நிவாரணமடைந்ததை உணர பல நாட்கள் செல்லும். மருந்தின் முழுப் பலன் கிடைப்பதற்கு ஒரு மாதம் வரை செல்லலாம்.

இந்த மருந்தினால் சாத்தியமாகக்கூடிய பக்கவிளைவுகள் எவை?

உங்கள் பிள்ளை ஒமெப்ரஸோல் மருந்தை உட்கொள்ளும்போது பின்வரும் சில பக்கவிளைவுகளைக் கொண்டிருக்கக்கூடும். பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது தொடர்ந்திருந்தால் மற்றும் அவை நிவாரணமடையாமலிருந்தால் அல்லது அவை உங்கள் பிள்ளைக்குத் தொந்தரவு கொடுத்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவரிடம் தெரிவிக்கவும்:

  • மலம் தண்ணீர் போல கழிதல் (வயிற்றுப் போக்கு)
  • வயிறு வலி
  • வாயு, வயிற்றுக் குழப்பம், அல்லது வாந்தி
  • தலை வலி
  • அசாதாரண மயக்க நிலை, களைப்பு
  • தோற்படை
  • மலங் கழிப்பதில் சிரமம் (மலச்சிக்கல்)

பின்வரும் பக்கவிளைவுகளில் பெரும்பாலானவை சாதாரணமானவையல்ல, ஆனால் அவை கடுமையான பிரச்சினைக்கு ஒரு அடையாளமாக இருக்கலாம். பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது இருந்தால் உடனே உங்கள் பிள்ளையின் மருத்துவரை அழைக்கவும் அல்லது உங்கள் பிள்ளையை அவசர நிலைச் சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லவும்:

  • நீடித்திருக்கும் தொண்டை வலி அல்லது தொண்டைக் கரகரப்பு
  • கண்கள் அல்லது தோல் மஞ்சள் நிறமாதல்
  • அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டிய தேவை
  • இரத்தம் கலந்த அல்லது மங்கலான சிறுநீர்
  • சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது கஷ்டம்
  • மார்பு வலி

உங்கள் பிள்ளை இந்த மருந்துகளை உட்கொள்ளும்போது என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்கவேண்டும்?

ஒமெப்ரஸோல் மருந்துடன் சேர்த்து உட்கொள்ளக்கூடாத சில மருந்துகள் இருக்கின்றன அல்லது சில நிலைமைகளில் ஒமெப்ரஸோல் வேளைமருந்தும் வேறு சில மருந்துகளும் தேவைக்குத் தகுந்தபடி சரிசெய்யப்படவேண்டியிருக்கலாம். உங்கள் பிள்ளை பின்வரும் மருந்துகளை உட்கொள்வதாக இருந்தால், அதை உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளர் தெரிந்திருப்பது முக்கியம்:

  • வோர்ஃபரின் (குமடின்) போன்ற, இரத்தத்தின் அடர்த்தியைக் குறைக்கும் மருந்து
  • டயஸெபாம் (வலியம்)
  • ஃபினைட்டொயின் (டிலன்டின்)

உங்கள் பிள்ளைக்கு வேறு ஏதாவது மருந்துகள் (மருந்துக் குறிப்புள்ள, மருந்துக் குறிப்பில்லாத, மூலிகை அல்லது இயற்கை மருந்துப் பொருட்கள்) கொடுப்பதற்கு முன்பாக உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் கேட்கவும்.

உங்கள் பிள்ளை உட்கொள்ளும் எல்லா மருந்துகளின் பட்டியலையும் வைத்துக்கொள்ளவும் மற்றும் அதை மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் காண்பிக்கவும்.

நீங்கள் அறிந்திருக்கவேண்டிய வேறு முக்கியமான தகவல்கள் எவை?

உங்கள் பிள்ளை ஒவ்வொரு ஒமெப்ரஸோல் வேளைமருந்தை உட்கொள்வதற்கு முன்பும் அமில நீக்கி மருந்தைக் கொடுக்கும்படி மருத்துவர் உங்களைக் கேட்கலாம். உங்கள் பிள்ளை ஒமெப்ரஸோல் மருந்தை உட்கொள்ளத் தொடங்கும் முதல் வாரத்துக்கு அமில நீக்கி மருந்தை உபயோகிக்கும்படி மருத்துவர் உங்களுக்குச் சொல்லலாம். உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளருடன் பேசுவதற்கு முன்னர் உங்கள் பிள்ளைக்கு அமில நீக்கி மருந்தைக் கொடுக்கவேண்டாம்.

வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள் மற்றும் விடுமுறைச் சுற்றுலா நாட்கள் வரை நீடிக்கக்கூடிய, போதியளவு ஒமெப்ரஸோல் மருந்தை எப்போதும் கைவசம் வைத்திருக்க நிச்சயமாயிருக்கவும். உங்கள் பிள்ளையின் மருந்து தீர்ந்துபோவதற்கு 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, உங்கள் மருந்துக்கடையை அழைக்கவும்.

ஒமெப்ரஸோல் திரவ மருந்து ஒரு மருந்துக்கடையால் தயாரிக்கப்படவேண்டும். உங்கள் பிள்ளைக்காக உங்கள் மருந்துக்கடையால் அதைத் தயாரிக்கமுடியுமா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளவும்.

ஒமெப்ரஸோல் கப்சியூல் மற்றும் மெல்லும் மாத்திரகளை அறை வெப்பநிலையில், குளிரான, உலர்ந்த இடத்தில் சூரியவெளிச்சம் படாமல் வைக்கவும். குளியலறை அல்லது சமயலறையில் வைக்கவேண்டாம்.

ஒமெப்ரஸோல் திரவ மருந்தை குளிர்ச்சாதனப் பெட்டியில் வைக்கவும். ஒவ்வொரு முறையும் உபயோகித்தவுடனேயே குப்பியை குளிர்ச்சாதனப் பெட்டியில் வைத்துவிடுவது முக்கியம். 24 மணி நேரங்களுக்கு மேலாக குளிர்ச்சாதனப் பெட்டிக்கு வெளியே வைத்துவிட்டால், பின்வருவனவற்றைச் செய்யவும்:

  • அறை மிகவும் சூடானதாக (30 முதல் 35 ℃ க்கு அதிகமானதாக) இருந்தால், உங்களால் முடிந்தளவு விரைவாகத் திரும்ப வைத்துவிடவும். திரவம் கபில நிறமாக மாறாதிருக்கும்வரை, நீங்கள் அதிலிருந்து இன்னொரு வேளைமருத்தை உபயோகிக்கலாம்.
  • அறை குளிர்ச்சியானதாக ( 23 முதல் 25ºC) இருந்தால், திரவம் கபில நிறமாக மாறாதிருக்கும்வரை இன்னொரு 24 மணி நேரங்களுக்கு நீங்கள் அதை உபயோகிக்கலாம். 24 மணி நேரப் பகுதிக்குள் அதைத் திரும்பவும் குளிர்ச்சாதனப் பெட்டிக்குள் வைத்துவிடவும்.

ஒமெப்ரஸோல் திரவ மருந்து கபில நிறமாக மாறியிருந்தால் அதை உபயோகப்படுத்தப்படக்கூடாது.

ஒமெப்ரஸோல் திரவ மருந்து தானியத் துகள்களைக் கொண்டது. குப்பியின் அடியில் அது படிந்திருப்பதைக் காண்பீர்கள். பீச்சாங்குழாய்க்குள் திரவத்தை எடுப்பதற்கு முன்பு உங்கள் குப்பியை நன்கு குலுக்கவேண்டும்.

உங்கள் பிள்ளையின் மருந்துகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டாம். வேறொருவரின் மருந்தை உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவேண்டாம்.

காலாவதியான எந்த மருந்துகளையும் வைத்திருக்கவேண்டாம். காலாவதியான அல்லது மீந்துபோன மருந்துகளை எறிந்து விடுவதற்கான மிகச் சிறந்த வழி என்ன என்பதை உங்கள் மருந்தாளரிடம் கேட்கவும்.

ஒமெப்ரஸோல் மருந்தை உங்கள் பிள்ளையின் கண்களில் படாதவாறு மற்றும் எட்டாதவாறு, ஒரு பூட்டப்பட்ட பாதுகாப்பான இடத்தில் வைக்கவும். உங்கள் பிள்ளை அளவுக்கதிகமான ஒமெப்ரஸோல் மருந்தை உட்கொண்டுவிட்டால், ஒன்டாரியோ பொய்சன் சென்டருக்கு பின்வரும் தொலைபேசி எண்களில் ஒன்றை அழைக்கவும். இந்த அழைப்புகள் இலவசமானவை:

  • நீங்கள் டொரொன்டோவில் வாழ்ந்தால் 416-813-5900 ஐ அழைக்கவும்.
  • நீங்கள் ஒன்டாரியோவில் வெறெங்கேயாவது வாழ்ந்தால் 1-800-268-9017 ஐ அழைக்கவும்.
  • நீங்கள் ஒன்டாரியோவுக்கு வெளியே வாழ்ந்தால், உங்கள் உள்ளூர் பொய்சன் இன்ஃபொர்மேஷன் சென்டரை அழைக்கவும்.

பொறுப்புத்துறப்பு: இந்த குடும்ப மருத்துவ உதவியிலுள்ள (Family Med-aid) தகவல்கள் அச்சிடும்வரை திருத்தமாக இருக்கிறது. இது ஒமெப்ரஸோல் மருந்தைப் பற்றிய தகவல்களின் ஒரு சுருக்கத்தை அளிக்கிறது. ஆனால் இந்த மருந்தைப்பற்றிய சாத்தியமான எல்லாத் தகவல்களையும் கொண்டில்லை. எல்லாப் பக்கவிளைவுகளும் பட்டியலிடப்பட்டில்லை. ஒமெப்ரஸோல் மருந்தைப் பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அல்லது மேலதிக தகவல்களைத் தெரிந்து கொள்ளவிரும்பினால், உங்கள் உடல்நலப் பராமரிப்பளிப்பவருடன் பேசவும்

Last updated: 三月 08 2010