நெருப்புக் காய்ச்சல் என்றால் என்ன?
நெருப்புக் காய்ச்சல் என்பது ஒரு பக்டீரியாத் தொற்றுநோய். சிகிச்சையின்மையால் பிள்ளைகள் மிகவும் நோயாளியாகிறார்கள் அல்லது இறக்கவும் நேரிடுகிறது. மோசமான சுற்றுப்புறத் தூய்மையுள்ள நாடுகளில் இந்த நோய் சாதாரணமானது. நெருப்புக் காய்ச்சல் நோய் கனடா நாட்டில் மிகவும் அரிது.
அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்
இந்த நோய் தொற்றி 7 முதல் 14 நாட்களின் பின்னர் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் தோன்றும். நோய் தொற்றி 2 மாதங்களுக்குப் பின்பு வரைகூட சில பிள்ளைகள் நோயாளியாக மாட்டார்கள். நெருப்புக் காய்ச்சலுக்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருவனவற்றை உட்படுத்தலாம்:
- விடாப்பிடியான ஒரு காய்ச்சல், 39 முதல் 40ºC வரை படிப்படியாக அதிகரித்தல்
- தலைவலி
- தொண்டை வலி
- களைப்பு
- பலவீனம்
- வயிற்றுவலி
- மலச்சிக்கல்
- வயிற்றுப்போக்கு
- வயிற்றில் அல்லது மார்பில் மேடான இளஞ்சிவப்புப் புள்ளிகளுடன் தற்காலிகமான தோற்படை
உங்கள் பிள்ளை நெருப்புக் காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகளைக் காண்பித்தால், உடனே அவனை ஒரு மருத்துவரிடம் கொண்டு செல்லவும்.
தகுந்த முறையில் சிகிச்சை செய்யப்பட்டால், அன்டிபையோடிக் மருந்துகள் உட்கொள்ளத்தொடங்கிய சில நாட்களின் பின்னர் பெரும்பாலும் அறிகுறிகள் குறையத் தொடங்கும். சிகிச்சை செய்யப்படாவிட்டால், நெருப்புக் காய்ச்சல் நோய் கடுமையான சிக்கல்களை உண்டாக்கும்.
காரணங்கள்
நெருப்புக் காய்ச்சல் நோய் பக்டீரியாவால் ஏற்படுகிறது. தொற்றுநோயுள்ள ஒருவரினால் மாசுபடுத்தப்பட்ட உணவு அல்லது தண்ணீரில் இந்தத் தொற்றுநோய் பெரும்பாலும் காணப்படும். கழிவறையை உபயோகித்த பின்னர் கவனமாகக் கைகளைக் கழுவாத, தொற்றுநோயுள்ள ஒருவரினால் உணவு அல்லது பானம் பரிமாறப்படும்போதும் பக்டீரியா கடத்தப்படலாம்.
ஆபத்தான காரணிகள்
இந்தக் காய்ச்சல் பரவலாகக் காணப்படும் ஒரு நாட்டுக்கு உங்கள் பிள்ளை பிரயாணம் செய்யும்போது, இந்தத் தொற்றுநோயால் பீடிக்கப்படும் அதிகளவு ஆபத்தில் இருக்கிறான். நோய்த்தொற்றுள்ள ஒருவருடன் மிகவும் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும்போது நோய்தொற்றுவதற்கான வாய்ப்பு அதிகரிகிறது. பலவீனமான தொற்றுநோய் எதிர்ப்புத் தொகுதியையுடைய பிள்ளைகளும் தொற்றுநோயால் பீடிக்கப்படும் அதிகளவு ஆபத்திலிருக்கிறார்கள்.
சிக்கல்கள்
நெருப்புக் காய்ச்சல் நோய்க்கு விரைவாகச் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், உங்கள் பிள்ளைக்குச் சிக்கல்கள் ஏற்படலாம். குடலில் இரத்தக் கசிவு அல்லது வேறு சேதம் ஏற்படலாம். வேறு சிக்கல்கள் பின்வருவனவற்றை உட்படுத்தலாம்:
- கடுமையான எடை இழப்பு
- கடுமையான வயிற்றுப்போக்கு
- விடாப்பிடியான கடுமையான் காய்ச்சல்
- பிரதிபலிப்பில்லாமல் இருத்தல்
- சித்தப்பிரமை அல்லது மாயத்தோற்றங்கள்
நெருப்புக்காய்ச்சல் உள்ள உங்கள் பிள்ளைக்கு உதவி செய்ய ஒரு மருத்துவர் என்ன செய்யலாம்
உங்கள் பிள்ளையின் மருத்துவர் உங்கள் பிள்ளையின் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் பற்றி உங்களிடம் கேட்கலாம் . மருத்துவர் நெருப்புக் காய்ச்சல் நோய் இருப்பதாகச் சந்தேகித்தால் உங்கள் பிள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம். உங்கள் பிள்ளை மலம், சிறுநீர், அல்லது இரத்தத்தின் மாதிரிகளைப் பரிசோதனைக்காகக் கொடுக்கவேண்டியிருக்கலாம். உங்கள் பிள்ளைக்கு வாய் வழியாக அன்டிபையோடிக் மருந்துச் சிகிச்சையளிக்கப்படலாம். கடுமையான நிலைமைகளில், அன்டிபையோடிக் மருந்துகள் நரம்பு மூலமாகக் கொடுக்கப்படலாம்.
உங்கள் பிள்ளைக்கு உதவி செய்வதற்கு நீங்கள் செய்யக்கூடியவை
உங்கள் பிள்ளை முழுமையாக நிவாரணமடைய 2 முதல் 3 வாரங்கள் வரை செல்லலாம். முழுமையாக நிவாரணமடையும் வரை, உங்கள் பிள்ளை ஓய்வெடுக்கவேண்டும் மற்றும் உடல் நீரேற்றப்படவேண்டும் அதாவது நிறைய பானம் பருக வேண்டும்.
காய்ச்சலைக் கண்காணிக்கவும் மற்றும் அன்டிபையோடிக் மருந்து முழுவதையும் உபயோகிக்கவும்
அன்டிபையோடிக் மருந்துச் சிகிச்சை தொடங்கிய 48 மணி நேரங்களுக்குள் பெரும்பாலும் காய்ச்சல் மற்றும் ஏதாவது வலி நிவாரணமடைந்துவிடும். நோய் திரும்பவும் ஏற்படுதல், அன்டிபையோடிக் எதிர்ப்பாற்றல், மற்றும் சிக்கல்களைத் தடுப்பதற்காக அன்டிபையோடிக் மருந்துகள் முழுவதையும் உபயோகிப்பது முக்கியம். காய்ச்சல் அல்லது தொண்டை வலிக்குச் சிகிச்சை செய்வதற்கு அசெட்டமினோஃபென் (டைலெனோல், டெம்ப்ரா, அல்லது வேறு பிரான்டுகள்) அல்லது ஐபியூபுரோஃபென்(மோட்ரின், அட்வில், அல்லது வேறு பிரான்டுகள்) உபயோகிக்கப்படலாம். உங்கள் பிள்ளைக்கு ASA (அசெட்டில்சாலிசிலிக் அசிட் அல்லது ஆஸ்பிரின்) கொடுக்க வேண்டாம்.
நீராகாரங்கள்
உடல் நீரேற்றத்தைத் தக்கவைப்பதற்காக உங்கள் பிள்ளைக்குத் தண்ணீர் அல்லது வேறு நீராகாரங்களைக் கொடுக்கவும்.
எப்போது மருத்துவ உதவியை நாடவேண்டும்.
பின்வரும் நிலைமைகளின் கீழ் உங்கள் பிள்ளையின் வழக்கமான மருத்துவரை உடனே சந்திக்கவும்:
- உங்கள் பிள்ளைக்கு நெருப்புக் காய்ச்சல் இருப்பதாகச் சந்தேகிக்கிறீர்கள்
- உங்கள் பிள்ளை நோயுற்றிருக்கிறான் மற்றும் நீங்கள் இப்போது தான் ஒரு வளர்முக நாட்டிலிருந்து திரும்பிவந்திருக்கிறீர்கள்
நோயைத் தடுத்தல்
நெருப்புக்காய்ச்சல் நோயிலிருந்து உங்கள் பிள்ளையைப் பாதுகாப்பதுதான் நோயைத் தடுப்பதற்கான மிகச் சிறந்த வழி.
இந்த நோய் உங்கள் பிள்ளையைப் பீடிக்கும் வாய்ப்பைக் குறைப்பதற்கான சில எளிய படிகள் பின்வருமாறு:
போத்தல் தண்ணீரை மாத்திரம் குடிக்கவும்
மாசுபட்ட குடி தண்ணீர் தான் தொற்றுநோய்க்கான ஒரு பொதுவான ஊற்றுமூலம். போத்தல் தண்ணீர் அல்லது தகரத்தில் அடைக்கப்பட்ட கார்பனேற்றப்பட்ட தண்ணீரை மாத்திரம் குடிக்கவும்.
கைகளைச் சுத்தமாக வைத்திருக்கவும்
கைகளை அடிக்கடி கழுவும்படி உங்கள் பிள்ளைக்குக் கற்பிக்கவும். உணவை உண்பதற்கு முன்பாக கைகளை சூடான சோப்பு நீரினால் கழுவவும். கழிவறையை உபயோகித்த பின்னரும் கைகளைக் கழுவவும். தண்ணீர் கிடைக்காதிருக்கும்போது அல்ககோல் சேர்ந்த ஹான்ட் சனிட்டைஸர் கிருமிகளைக் கொல்லாம்.
உங்களால் தோல் உரிக்கக்கூடிய பழங்கள் அல்லது மரக்கறிகளை மாத்திரம் உண்ணவும்
பச்சையான பழங்கள் அல்லது மரக்கறிகள் மாசுபட்ட தண்ணீரில் கழுவப்பட்டிருக்கலாம். வாழைப்பழங்கள் போன்ற, தோல் உரிக்கக்கூடிய பொருட்களை மாத்திரம் உண்ணவும்.
நோய்த் தடுப்பு மருந்துகள்
2 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு உபயோகிக்கக்கூடிய நெருப்புக்காய்ச்சல் தடுப்பு மருந்துகள் இருக்கின்றன. உங்கள் பிள்ளைக்குத் தகுதியான நோய்த் தடுப்பு மருந்தைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசவும். SPAN>
முக்கிய குறிப்புகள்
- நெருப்புக் காய்ச்சல் ஒரு தொற்றுநோய். இது பக்டீரியா என அழைக்கப்படும் கிருமிகளினால் ஏற்படுகிறது.
- சிகிச்சையில்லாமல் பிள்ளைகள் கடும் நோயாளிகளாகலாம் அல்லது இறக்கவும் கூட நேரிடலாம்.
- மோசமான சுகாதாரமுள்ள நாடுகளிலிந்த நோய் சாதாரணமானது.
- உங்கள் பிள்ளை நெருப்புக்காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகளைக் காண்பித்தால், உடனே மருத்துவ உதவியை நாடவும்.
- நோய்த்தடுப்பாற்றல் அளிப்பது பரிந்துரை செய்யப்படுகிறது. பிரயாணம் செய்வதற்கு முன்னர் உங்கள் மருத்துவருடன் பேசவும்.