பிள்ளைக் காய்ச்சல் வலிப்பு (காய்ச்சலால் ஏற்படும் வலிப்பு)

Febrile seizures (convulsions caused by fever) [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

பிள்ளைகளின் காய்ச்சல் வலிப்பின் அறிகுறிகள், தடுப்பு முறைகள், மற்றும் காய்ச்சல் வலிப்பினால் அவதிப்படும் பிள்ளைக்கான முதல் உதவி சிகிச்சை.

உங்கள் பிள்ளை காய்ச்சலுக்கு கடுமையாகப் பிரதிபலித்ததன் மூலமாக, அவனுக்கு ஒரு வலிப்பு வந்துள்ளது. இந்த வலிப்புகளால் பெற்றோர்கள் திகிலடைந்து போனாலும்கூட, இவை பொதுவாக பிள்ளைக்குத் தீங்கிழைக்காது. உங்கள் பிள்ளைக்கு காய்ச்சல் வலிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தத் தகவல் விளக்குகின்றது.

பிள்ளைக் காய்ச்சல் வலிப்புகள் (ஃபெப்ரைல் சீஷர்ஸ்) என்பது என்ன?

தசைகளில் திடீரென ஏற்படும் கட்டுப்படுத்தப்பட முடியாத குறுகிய துடிப்பு வலிப்புகளாகும். இந்த வலிப்புகள் காய்ச்சலால் ஏற்படுத்தப்படும் போது, அவை காய்ச்சல் வலிப்புகள் எனப்படுகின்றன.

உங்கள் பிள்ளைக்கு காய்ச்சல் வலிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்

உங்கள் பிள்ளைக்கு காய்ச்சல் வலிப்பு ஏற்பட்டால், அமைதியாக இருந்து பின்வருவனவற்றைச் செய்யுங்கள்.

  1. ஆபத்தான இடங்களிலிருந்து பிள்ளையைத் தூரவிலக்கி வையுங்கள். அருகிலிருக்கும் கூர்மையான அல்லது கடினமான பொருட்களை அகற்றுங்கள்.
  2. பிள்ளை பக்கவாட்டாகப் படுத்திருக்கும்போது, அந்தப் பிள்ளையின் தலையின் கீழ் தலையணை ஒன்றைப் பராமரிப்பாளர் வைத்தல்
     
  3. உங்கள் பிள்ளையை பிடித்து வைக்க அல்லது அசைவுகளை நிறுத்த முயற்சிசெய்ய வேண்டாம். முடிந்தால், வாயிலிருந்து நீர் வடியக்கூடியதாக, பிள்ளையை மெதுவாக ஒரு பக்கமாகத் திருப்புங்கள் அல்லது அவனின் தலையை ஒரு பக்கமாகத் திருப்புங்கள்.
  4. உங்கள் பிள்ளையை செளகரியமாக வைத்திருங்கள். மடிக்கப்பட்ட ஒரு ஜாக்கேட்டைப் போன்ற ஏதாவது மென்மையான ஒன்றை உங்கள் பிள்ளையின் தலையின் கீழ் வையுங்கள். இறுக்கமான உடைகளை குறிப்பாக கழுத்தைச் சுற்றியிருப்பவற்றை கழட்டிவிடுங்கள். கண்ணாடி உடைந்து விடாமலிருக்க அதையும் கழட்டுங்கள்.
  5. உங்கள் பிள்ளையின் வாயில் எதையும் போட முயற்சிக்க வேண்டாம். இது மூச்சடைப்பை ஏற்படுத்தும் அல்லது பற்களை உடைத்துவிடும்.
  6. வலிப்பு எவ்வளவு நேரம் நீடித்தது என்பதை உங்கள் மருத்துவர் அறிய விரும்புவார். முடிந்தால், வலிப்பு எப்போது ஆரம்பித்தது,எப்போது முடிந்தது என்பதை ஒரு சுவர் மணிக்கூட்டில அல்லது ஒரு கைக்கடிகாரத்தில் பார்த்து வையுங்கள்.
  7. வலிப்பு 5 நிமிடங்களைவிட குறைந்த நேரமே நீடித்தால், பிள்ளையை உடனடியாக மருத்துவரிடம் அல்லது கிளினிக்கிற்கு எடுத்துச் செல்லுங்கள். மருத்துவரின் அலுவலகம் அல்லது கிளினிக் மூடப்பட்டிருந்தால் பிள்ளையை மருத்துவ மனை ஒன்றின் அவசரப்பிரிவிற்கு அழைத்துச் செல்லுங்கள். பிள்ளைக்கு கடுமையான சுகவீனம் ஏதும் இல்லை என்பதை மருத்துவர் உறுதிசெய்ய வேண்டும்.
  8. கைக்கடிகாரம்
  9. வலிப்பு 5 நிமிடங்களுக்கு மேல் நீடித்தால், உடனடியாக அம்புலன்ஸை அழையுங்கள். உங்கள் பிள்ளைக்கு மருத்துவரால் அலுவலக்கத்தில் வழங்கக்கூடியதைவிட அதிக பராமரிப்பு தேவைப்படலாம்.

வலிப்பிற்குப்பின் எதை எதிர்பார்க்கலாம்

சில சமயங்களில்வலிப்பு வந்ததன் பின்பு பிள்ளைகள் குழப்பமடைந்தவர்களாயும் தூக்க மயக்கம் உள்ளவர்களாயும் இருப்பார்கள் என்பதால் அவர்கள் சிரிது நேரம் நித்திரைகொள்ள வேண்டும். மருத்துவ பராமரிப்பை நாடுவதற்கு, பிள்ளை இயல்பான நிலைக்குத் திரும்பும்வரை காத்திருக்க வேண்டாம். வலிப்பு முடியும்வரையும் அவன் முழுமையாக தெளிவடையும்வரையும் உங்கள் பிள்ளைக்கு தண்ணீர், உணவு அல்லது மருந்து எதையும் கொடுக்கவேண்டாம்.

மருத்துவரின் அலுவலகத்தில் அல்லது மருத்துவமனையில் எதை எதிர்பார்க்கலாம்

வலிப்பு எவ்வளவு நேரம் நீடித்தது மற்றும் உங்கள் பிள்ளையின் தோற்றம், அசைவுகள் எப்படி இருந்தன போன்றவை உட்பட, வலிப்பைக் கவனமாக விவரிக்கும்படி மருத்துவர் கேட்பார். மென்மையாகப் பிடிப்பதன் மூலம் அல்லது துடிக்கும் உடல் உறுப்பின் மீது அழுத்தத்தைப் பிரயோகிப்பதன் மூலம் துடிப்பு நிறுத்தப்படக்கூடுமா, அல்லது துடிப்பு தொடர்ந்து நீடித்ததா என்பதை தெரிந்துகொள்வது மருத்துவருக்கு உதவக்கூடும்.

பிள்ளையை மருத்துவர் பரிசோதனை செய்வார். காய்ச்சலுக்கான காரணம் தெரிந்திருந்து மற்றும் உங்கள் பிள்ளை குழப்பமடைந்தோ அல்லது மயங்கிய நிலையிலோ இல்லாவிட்டால், ஆய்வுகூட சோதனைகள் எதையும் செய்யுமாறு மருத்துவர் கேட்கமாட்டார். ஆனால் வேறு எதோ பிரச்சனை இருப்பதாக அவர் சந்தேகப்பட்டால் சில பரிசோதனைகளை செய்யுமாறு அவர் ஆணையிடக்கூடும். இவற்றின் மூலம் வலிக்கு வேறு காரணங்கள் இல்லை என்பது உறுதிசெய்யப்படும்.

உங்கள் பிள்ளைக்கு சாராரணமான காய்ச்சல் வலிப்பு ஏற்பட்டிருந்தால், அவன் அநேகமாக மருத்துவமனையில் நிறுத்தப்படவேண்டிய தேவையிருக்காது.

உங்கள் பிள்ளையின் காய்ச்சலுக்கு சிகிச்சையளித்தல்

பிள்ளைப்பருவத்தினரில் ஏற்படும் ஏறக்குறைய எல்லாவிதமான சுகவீனங்கள் மற்றும் தொற்று நோய்கள் காரணமாகவும் காய்ச்சல் தோன்றக்கூடும். பொதுவாக உங்கள் பிள்ளையின் உடல் வெப்பநிலை உயர ஆரம்பிக்கும்போது காய்ச்சல் வலிப்பு ஏற்படுகின்றது. இந்த வேளையில் உங்கள் பிள்ளைக்குக் காய்ச்சலிருப்பது உங்களுக்குத் தெரிந்துகூட இருக்காது. பிள்ளையின் காய்ச்சலை மருந்துகள் மூலம் சமாளிக்க முயல்வது வலிப்பை தவிர்க்கவோ அல்லது அதன் கால அளவைக் குறைக்கவோ மாட்டாது, ஆனால் இது பிள்ளை செளகரியமாக இருக்க உதவலாம்.

பிள்ளை, வலிப்பு வந்து துடிக்கும்போது காய்ச்சல் மருந்தை கொடுக்க முயற்சிக்க வேண்டாம். வலிப்பு முடியும்வரை காத்திருங்கள். பிள்ளையை குளியல் தொட்டியில் போடவேண்டாம்.

உங்கள் பிள்ளையின் உடல் வெப்பநிலையை அளவிடுதல்

உங்கள் பிள்ளையின் உடல் சூடாக இருந்தால், ஒரு வெப்பமானியின் உதவியுடன் பிள்ளையின் உடல் வெப்பநிலையை சோதித்துப்பாருங்கள். வாய்க்குள் வெப்பமானியை வைத்து அளவிடும்போது சாதாரணமான உடல் வெப்பநிலை 37.5°C (99.5°F) ஆகும், அல்லது குதத்திற்குள் வெப்பமானியை வைத்து அளவிடும்போது சாதாரண வெப்பநிலை 38°C (100.4°F) ஆகும்.

மருந்து

பிள்ளையின் காய்ச்சலுக்கு அசெட்டமினோஃபென் (டைலெனோல், டெம்ப்ரா, பனடோல்) அல்லது ஐபியூபுரோஃபென் (அட்வில், மோட்ரின், ப்ரூஃபென்) என்பனவற்றைக் கொடுங்கள். எவ்வளவு மருந்து கொடுக்கவேண்டும் அல்லது எத்தனை தடவை கொடுக்கவேண்டும் என்பதை அறிய, மருந்துப்போத்தலில் உள்ள அறிவுறைகளை கவனமாக படியுங்கள். உங்களுக்கு சரியாகத் தெரியவில்லையென்றால் மருத்துவர் அல்லது ஃபார்மசிஸ்டுடன் பேசுங்கள். மருத்துவர் கூறினால் மட்டுமே உங்க பிள்ளைக்கு ASA (அசெடில்சாலிசிலிக் அசிட் அல்லது அஸ்பிரின்) கொடுங்கள்.

உடை

பிள்ளைக்கு மெல்லிய ஆடைகளை உடுத்துங்கள். பாரமான படுக்கையாடைகளை அகற்றுங்கள்.

மேலதிகத் தகவலுக்கு தயவுசெய்து  காய்ச்சல் ஐப் படியுங்கள்.

பிள்ளைக் காய்ச்சல் வலிப்புகள் பொதுவானவையே

100 இல் ஐந்து பிள்ளைகளுக்கு, ஆறு மாதத்திற்கும் ஆறு வயதிற்கும் இடைப்பட்ட காலத்தில் குறைந்தது ஒரு தடவையாவது காய்ச்சல் வலிப்பு ஏற்படுகின்றது. இந்தப் பிள்ளைகளில் ஏறக்குறைய 10 இல் மூன்று பேருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தடவை காய்ச்சல் வலிப்பு ஏற்படுகின்றது.

காய்ச்சல் வலிப்புக்கு வலுவான ஒரு மரபுவழித்தொடர்பு இருக்கின்றது. காய்ச்சல் வலிப்புள்ள பிள்ளைகளின் அநேகமான பெற்றோர்களும் காய்ச்சல் வலிப்பை உடையவர்களாகத்தான் இருந்தார்கள், மற்றும் பிள்ளையின் உடன் பிறப்புகளுக்கும் இந்த வலிப்பு வருவது சாத்தியமே.

பிள்ளைக் காய்ச்சல் வலிப்புகள் மூளையைப் சேதப்படுத்துவதில்லை

காய்ச்சல் வலிப்பின்போது ஒரு பிள்ளையின் தோற்றம், பெற்றோருக்கு மிகுந்த பயத்தை ஏற்படுத்தலாம். இருப்பினும் எமக்குத் தெரிந்தவரை குறுகிய வலிப்புகள் மூளையை சேதப்படுத்துவதோ அல்லது மூளையில் நிரந்தரமான மாற்றங்களை ஏற்படுத்துவதோ இல்லை. அநேகமான காய்ச்சல் வலிப்புகள், நீண்ட நேரத்திற்கு நடப்பதாகத் தோன்றினாலும்கூட சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கின்றன. பிள்ளைக்கு நீண்ட நேரம் நீடிக்கும் காய்ச்சல் வலிப்பு ஏற்பட்டால்கூட, மூளை சேதமடையும் அபாயம் குறைவாகவே உள்ளது.

பிள்ளைக் காய்ச்சல் வலிப்பைத் தவிர்த்திடும் மருந்துகள்

காய்ச்சல் வலிப்பைத் தடுக்கும், வலிப்பு எதிர்ப்பு மருந்துகள் ( அன்டைகன்வல்சன்ட்ஸ் அல்லது அன்டை-எபிலெப்டிக் மருந்துகள்)இருக்கின்றன. இந்த மருந்துகளால் பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன, மற்றும் காய்ச்சல் வலிப்புள்ள பிள்ளைகள் பொதுவாக இந்த மருந்தை எடுக்கவேண்டிய தேவையில்லை. இருப்பினும், விசேஷமான சூழ்நிலைகளின் கீழ் வலிப்பு எதிர்ப்பு மருந்தை எடுக்கவேண்டுமென பிள்ளையின் மருத்துவர் நினைக்கக்கூடும்.

உங்கள் பிள்ளைக்கு அடிக்கடி காய்ச்சல் வலிப்பு ஏற்பட்டால், குறுகிய நேரத்திற்கு செயற்படும் ஒரு வலிப்பு எதிர்ப்பு மருந்தை மருத்துவர் கொடுக்கக்கூடும். உங்கள் பிள்ளையை எப்படிப் பராமரிப்பது எப்போது மருத்துவ உதவியை நாடுவது என்பதை மருத்துவர் விளங்கப்படுத்துவார்.

உங்கள் பிள்ளைக்கு நீங்கள் விசேஷமான சிகிச்சை கொடுக்கத் தேவையில்லை

எல்லாப் பிள்ளைகளுமே குறிப்பாக இளம் பிள்ளைகள் ஏதோ ஒரு வேளையில் சுகவீனமடையவே செய்கின்றார்கள். உங்கள் பிள்ளை காய்ச்சலுக்கு கடுமையான விதத்தில் பிரதிபலிக்கின்றது. ஏனைய சாதாரணமான ஆரோக்கியமான பிள்ளையைப் போலவே உங்கள் பிள்ளையையும் பாதுகாத்து சிகிச்சையளியுங்கள். காய்ச்சலும் வலிப்பும் திடீரென ஆரம்பிக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் பிள்ளை ஐந்து வயதுக்குக் குறைந்ததாக இருந்தால், அவன் குளிக்கும்போது அருகிலேயே நில்லுங்கள். குளியல்த் தொட்டியில் உங்கள் பிள்ளையை தனிமையில் விடவேண்டாம்.

பிள்ளை வளர்ந்ததும் பிள்ளைக் காய்ச்சல் வலிப்புகள் தானாகவே நின்றுவிடும்

காய்ச்சல் வலிப்பு இருப்பதால் உங்கள் பிள்ளைக்கு பிற்பட்ட காலத்தில் காக்காய் வலிப்பு வரும் என்று அர்த்தமாகாது. காய்ச்சல் வலிப்புள்ள பிள்ளைகளில்,100 இல் ஐந்துக்கும் குறைந்த பிள்ளைகளுக்கே காக்காய் வலிப்பு ஏற்படுகின்றது.

முக்கிய குறிப்புகள்

  • காய்ச்சல் வலிப்பு என்பது காய்ச்சலால் தோற்றுவிக்கப்படும் கட்டுப்படுத்த முடியாத துடிப்புகளாகும். ஆறு மாதத்திற்கும் ஆறு வயதிற்கும் இடைப்பட்ட பிள்ளைகளில் இது பொதுவானதாகக் காணப்படுகின்றது.
  • காய்ச்சல் வலிப்பு ஒன்றின்போது உங்கள் பிள்ளையை செளகரியமாக வைத்திருங்கள் மற்றும் அதன் வாயில் எந்தப் பொருளையும் போடாதீர்கள். பிள்ளையை ஒரு பக்கமாகத் திருப்புங்கள் அல்லது அவனின் தலையை ஒரு பக்கமாகத் திருப்புங்கள்.
  • காய்ச்சல் வலிப்பொன்றின் பின் பிள்ளையை மருத்துவரிடம் எடுத்துச் செல்லுங்கள். வலிப்பு ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீடித்தால் அம்புலன்ஸை அழையுங்கள்.
  • பிள்ளையின் காய்ச்சலுக்கு மருந்து கொடுப்பது எப்போதும் வலிப்பை தவிர்க்கமாட்டாது.
  • உங்களுக்கு கேள்விகளோ அல்லது கவலைகளோ இருந்தால் பிள்ளையின் மருத்துவருடன் பேசுங்கள்.
Last updated: 10月 16 2009