மூக்கு-இரைப்பைக் குழாய் (NG): உங்களுடைய பிள்ளையின் மூக்கு-இரைப்பைக் குழாயை எப்படி உட்செருகுவது:

Nasogastric (NG) Tube: How to insert your child's NG tube [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

உங்களுடைய பிள்ளைக்கு மூக்கு –இரைப்பைக் குழாயை எப்படி உட்செருகுவது என்பதைப் பற்றி படிப்பதற்கு இலகுவான ஒரு வழிகாட்டி நூல்.

மூக்கிலிருந்து வயிற்றுக்குச் செல்லும் குழாயுடன் ஒரு பிள்ளை

மூக்கு-இரைப்பைக் குழாய் என்றால் என்ன?

மூக்கு-இரைப்பைக் குழாய் (NG) என்பது, முக்குத்துவாரத்தினூடாகத் தொண்டை வழியாக வயிற்றுக்குள் செலுத்தப்படும் ஒரு நீளமான மெல்லிய உட்துவாரமுள்ள குழாய் ஆகும். உங்களுடைய பிள்ளையால் வாய் மூலமாக உணவு உட்கொள்ளமுடியாவிட்டால், அவனுக்கு உணவூட்டுவதற்காக நீங்கள் இந்தக் குழாயை உபயோகிக்கலாம். திரவங்கள் இந்தக் குழாயினூடாக வயிற்றுக்குள் செல்லும்.

இந்தக் குழாயை நீங்கள் எப்படி உட்செருக முடியும்?

A. உட்செருகுவதற்காகக் குழாயைத் தயார் செய்தல்

குழந்தைகளுக்கும் பிள்ளைகளுக்கும் இந்தக் குழாய் உட்செருகலுக்கான படிகள் சிறிது வேறுபடும். தயவு செய்து உங்களுடைய தாதியின் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

  1. பின்வரும் உபகரணங்களைச் சேகரிக்கவும்:
    • அளவுள்ள, மூக்கு-இரைப்பைக் குழாய்_____
    • ஹைபஃபிக்ஸ்™ போன்ற ஒவ்வாமையை ஊக்கப்படுத்தாத வார்ப்பட்டையின் சிறு துண்டுகள்
    • உறிஞ்சு குழாயுடன் ஒரு கிளாஸ் தண்ணீர்(குடிப்பதற்காக) அல்லது குழந்தைக்கு சூப்பான்
    • கிருமியழிக்கப்பட்ட தண்ணீர் அல்லது தண்ணீரில் கரையக்கூடிய உராய்வு நீக்கி (குழாயின் உராய்வை நீக்குவதற்காக)
    • உலர்ந்த மருந்தூசியும் உங்களுடைய உடலொலிபெருக்கிக்காட்டியும்.
    • நிரந்தர அடையாளமிடும் பேனா
    • கார –அமிலத்தன்மையைப் பரிசோதிக்கும் பட்டை
  1. எல்லா உபகரணங்களையும் உங்களுக்கு அருகில் வைக்கவும்.
  2. உங்களுடைய கைகளைக் கழுவவும்
  3. சரியான நீளத்தைக் கண்டுபிடிப்பதற்காக மூக்கு-இரைப்பைக் குழாயை அளக்கவும்.
    • உங்களுடைய பிள்ளையை நிமிர்ந்து உட்கார வைக்கவும். குழந்தைகளை, நாடி சிறிது உயர்த்திய நிலையில் முகம் மேலே பார்த்தவண்ணமாக கிடத்தவும்.
    • துவாராங்களுள்ள குழாயின் நுனியை உங்களுடைய பிள்ளையின் மூக்குத் துவாரத்தில் வைத்து துவாரங்களிலிருந்து அளக்க ஆரம்பிக்கவும்.
    • உணவூட்டும் குழாயை, மூக்குத் துவாரத்திலிருந்து காது மடலின் அடிவரையாகவும், பின்னர் மார்பு எலும்பின் கீழ் வரையாகவும் (ஒரு குழந்தைக்கு ஏறக்குறைய 1 விரல் அகலமும் ஒரு பிள்ளைக்கு 2 விரல் அகலமும்) அளக்கவும்.
Measuring the NG Tube for Correct Lengthஒரு சிசு மற்றும் ஒரு வளர்ந்த பிள்ளையின் நெஞ்சு எலும்பின் அடி மற்றும் தொப்புள் வரையான அளவீடுகள் மற்றும் அமைவிடம்
  1. இந்த அளவுகளைக் குழாயில் நிரந்தர அடையாளமிடும் பேனாவால் குறிக்கவும்.
Marking Measurements on NG Tubeஇரு முனைகள் மற்றும் அகற்றக்கூடிய காப்பிடப்பட்ட வயர் கொண்ட NG குழாயில் அடையாளங்கள்
  1. குழாயிலிருந்து வழிகாட்டிக் கம்பியைத் தளர்த்தவும். ஆனால் அகற்றிவிடக்கூடாது.

B. குழாயை உட்செருகுதல்

ஒவ்வொரு முறையும் நீங்கள் குழாயை உட்செருகும்போது, ஒரு மூக்குத்துவாரத்திலிருந்து அடுத்ததற்கு, மாற்றி மாற்றிச் செருகவும். உட்செருகும் குழாயை ஒவ்வொரு மாதமும் மாற்றவேண்டும் என்பதை நினைவில் வைக்கவும்.

உங்களுடைய பிள்ளைக்கு உட்செருகும் குழாயை ஒவ்வொரு முறையும் செருகும்போது, பின்வரும் படிகளைப் பின்பற்றவேண்டும்:

  1. உங்களுடைய பிள்ளையை நிமிர்ந்து உட்காரவைக்கவும். அவன் ஒரு குழந்தையாக அல்லது மிகவும் சிறியவனாக இருந்தால், அவனுடைய கைகளையும் கால்களையும் சேர்த்துப் பிடிக்கக்கூடியவாறு ஒரு கம்பளியில் படுக்கவைத்து சுற்றிக் கட்டவும்.
  2. குழாயின் முதல் 2 முதல் 4 அங்குலம் (5 முதல் 10 செமீ)வரை தண்ணீரில் அல்லது தண்ணீரில் கரையக்கூடிய உராய்வு நீக்கியில் (உதாரணமாக, KY™ அல்லது Muko™ ஜெலி) அமிழ்த்தவும்.
  3. நீங்கள் தெரிவு செய்து வைத்திருக்கும் மூக்குத்துவாரத்தினுள் குழாயின் நுனியை உட்செருகி, குழாயை சிறிது தாழ்த்தி அந்தப் பக்கத்திலிருக்கும் காதை நோக்கி குழாயை உட்செருகவும். குழாயைப் பலமாக உட்செருக வேண்டாம்.
  4. உங்களுடைய பிள்ளைக்குத் தண்ணீர் குடிப்பதற்கு அனுமதி இருந்தால், அவன் உறிஞ்சு குழாய் மூலமாகத் தண்ணீரை உறிஞ்சிக் குடிக்கலாம். உங்களுடைய குழந்தைக்கு விழுங்குவதற்கு உதவியாக ஒரு சூப்பானையும் கொடுக்கலாம். உங்களுடைய பிள்ளை குடிப்பதற்கு அனுமதிக்கப்படாவிட்டல், குழாய் கீழே இறங்கும்போது வெறுமனே விழுங்கும்படி சொல்லலாம்.
  5. அடையாளமிடப்பட்ட பகுதி மூக்குத் துவாரத்தை அடையும் வரை குழாயைத் தொடர்ந்து உட்செருகவும். குழாய் உங்களுடைய பிள்ளையின் வாயிலிருந்து வெளியே வந்துவிட்டால், அதை இழுத்து வெளியே எடுத்தபின்னர், உங்கள் பிள்ளை சுதாகரிக்கும் வரை காத்திருந்து பின்னர் திரும்பவும் உட்செருகலாம்.
  6. குழாயை உங்களுடைய பிள்ளையின் முகத்தில் ஒரு சிறிய வார்ப்பட்டைத் துண்டினால் பாதுகாப்பாக ஒட்டிவிடவும்.
  7. எதிர்பாராமல் மூக்கு-இரைப்பைக் குழாயை, உங்களுடைய பிள்ளையின் மூச்சுக்குழாயில் வைத்துவிடாதபடி விழிப்பாக இருக்கவும். மூக்கு –இரைப்பைக்குழாய், நுரையீரல் காற்றுக் குழாய்க்குட் சென்றால், உங்களுடைய பிள்ளைக்கு மூச்சுத்திணறல், இருமல், அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம். இவ்வாறு சம்பவித்தால், மூக்கு –இரைப்பைக் குழாயை உடனே வெளியே எடுத்துவிடவும். உங்களுடைய பிள்ளையைச் சற்று ஓய்வெடுக்க வைத்து, அவன் சுதாகரித்தவுடன் திரும்பவும் ஆரம்பிக்கவும்.
  8. கம்பியை அகற்றுவதற்கு முன்பாகவும் எதாவது உணவு அல்லது மருந்து கொடுக்கப்படுவதற்கு முன்பாகவும், குழாய் சரியாக வைக்கப்பட்டுள்ளதா எனச் சரிபார்கவும். குழாய் வைக்கப்பட்டுவதை சரிபார்ப்பதற்காக கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அறிவுரைகளைப் பார்க்கவும்.
  9. மூக்கு –இரைப்பைக் குழாயை அகற்றுவதற்காக, உங்களுடைய பிள்ளையின் மூக்குத்துவாரத்தில் பிடித்துக்கொண்டு மென்மையாக, ஆனால் உறுதியாக, வழிகாட்டிக் கம்பியின் வழியாக இழுக்கவும். வழிகாட்டிக் கம்பியை எறிந்துவிடவேண்டாம். வரும்காலங்களில் உபயோகிப்பதற்காக அதைப் பாதுகாப்பான இடத்தில் சேமித்து வைக்கவும்.
     

C. குழாய் வைக்கப்பட்டிருப்பதைச் சரிபார்த்தல்

உங்களுடைய பிள்ளையின் குழாய் வைக்கப்பட்டிருப்பதைப் பின்வரும் சமயங்களில் சரிபார்க்கவும்:

  • ஒவ்வொரு முறையும் உணவூட்டுவதற்கு முன்பாக
  • ஒரு புதிய குழாய் உட்செருகப்படும்போது
  • குழாய் வெளியே வந்திருக்குமா என நீங்கள் கவலைப்படும்போது
  • உங்களுடைய பிள்ளைக்கு மூச்சுடைப்பு, வாந்தி, இருமல் அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால்

உங்களுடைய பிள்ளைக்கு உட்செருகப்பட்டிருக்கும் குழாயை சரிபார்பதற்கு இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன. பின்வரும் இந்த இரு வழிமுறைகளையும் உபயோகித்துச் சரிபார்க்கவும்:

  1. இரண்டு மிலீ திரவம் கொண்ட உட்செலுத்தி NG குழாயுடன் இணைக்கப்பட்டுள்ளது

    வெறுமையான மருந்தூசியை அடப்டரில் பொருத்தி, வயிற்றின் கொள்ளளவான 2 மிலியை இழுத்தெடுக்கக்கூடியவாறு தண்டைப் பின்னோக்கி இழுக்கவும்.

  2. pH சோதனைத் துண்டுகள் மற்றும் pH நிற வழிகாட்டி

    கார –அமிலத்தைப் பரிசோதிக்கும் அட்டையை வயிற்றிலுள்ள திரவத்தினால் ஈரமாக்கி அதன் நிறத்தைக்கொள்கலனின் மேலிருக்கும் மேலுறையுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும். அட்டையின் நிறம் ______ க்கு உட்பட்ட இலக்கமாக இருக்கவேண்டும்.

  3. மூக்கு – இரைப்பைக் குழாய் சரியான இடத்தில் வைக்கப்படவில்லை என நீங்கள் கருதினால், அதை அகற்றிவிட்டுத் திரும்பவும் முயற்சி செய்யவும்.

ஒரு புதிய குழாயை உட்செருகிய பின்னர்: குழாய் வயிற்றுக்குள் சரியான இடத்தில் செருகப்பட்டுள்ளது என்று நீங்கள் திருப்தியடைந்தவுடன், 1 மிலி முதல் 2 மிலி வரை தண்ணீரைக் குழாயினூடாகப் பீச்சியடிக்கவும். இது வழிகாட்டிக் கம்பியின் உராய்வை நீக்கி அதை வெளியே எடுப்பதற்கு இலகுவாக்கும்.

D. குழாய் வயிற்றுக்குள் உட்செருகப்பட்டுவிட்டது என நீங்கள் நிச்சயமானவுடன் பின்வருவனவற்றைச் செய்யவும்:

  1. குழாயைப் பத்திரப்படுத்தவும். அதை கன்னத்தில் பாதுகாப்பாக வைப்பதற்காக குழாய்க்குக் குறுக்காக வார்பட்டியிடவும்.
  2. குழாயைப் பாதுகாப்பாக வைக்கும்போது அது விலகாதிருப்பதற்காக வழிகாட்டிக் கம்பியை அகற்றிவிடவும். குழாயின் முனையை மூடிவிடவும்.
  3. வரும்காலங்களில் உபயோகிப்பதற்காக வழிகாட்டிக் கம்பியைச் சேகரித்து வைக்கவும். அதைச் சுத்தம் செய்து, உலர வைத்து, ஒரு பாதுகாப்பான இடத்தில் பத்திரப்படுத்தி வைக்கவும்.

அதிக காலம் உபயோகிக்கும்போது தோலரிப்பு ஏற்பட்டு, அதை உங்களால் நிவாரணமடையச் செய்யமுடியாவிட்டால், உங்களுடைய பிள்ளையின் மருத்துவருடன் அல்லது தாதியுடன் கலந்து பேசவும்.

முக்கிய குறிப்புகள்

  • ஒரு மூக்கு-இரைப்பைக் குழாய் என்பது, முக்குத்துவாரத்தினூடாகத் தொண்டை வழியாக வயிற்றுக்குள் செலுத்தப்படும் ஒரு நீளமான மெல்லிய உட்துவாரமுள்ள குழாய் ஆகும்.
  • ஒவ்வொரு முறையும் நீங்கள் குழாயை உட்செருகும்போது, ஒரு மூக்குத்துவாரத்திலிருந்து அடுத்ததற்கு, மாற்றி மாற்றிச் செருகவும்.
  • மூக்கு –இரைப்பைக்குழாய், நுரையீரல் காற்றுக் குழாய்க்குட் சென்றால், உங்களுடைய பிள்ளைக்கு மூச்சு அடைப்பு, இருமல், அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம். இவ்வாறு சம்பவித்தால், மூக்கு –இரைப்பைக் குழாயை உடனே வெளியே எடுத்துவிடவும். உங்களுடைய பிள்ளையைச் சற்று ஓய்வெடுக்க வைத்து, அவன் சுதாகரித்தவுடன் திரும்பவும் ஆரம்பிக்கவும்.
​​
Last updated: 12月 07 2010