பற்கள் முளைத்தல்

Teething [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

பற்கள் முளைத்தல் என்றால் என்ன?

பற்கள் முளைத்தல் என்பது உங்கள் குழந்தையின் முதல் வரிசைப் பற்கள் (பாற்பற்கள்) தெரியத் தொடங்குவதாகும். உங்கள் குழந்தையின் பற்களைப் பராமரித்தல், உங்கள் குழந்தையின் ஈறுகளினூடாக முதற்பல் வெளியே எட்டிப்பார்த்தவுடனேயே தொடங்குகிறது. ஆரோக்கியமான பற்கள், உங்கள் குழந்தையின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை முழுமையாக்குகின்றன.

வலியை அனுபவிக்கும் குழந்தைகள், மற்றும் அதைக் கண்ணால் பார்த்துக்கொண்டேயிருக்கும் பெற்றோர் ஆகிய இருவருக்குமே பல் முளைத்தல் ஒரு கடினமான காலப்பகுதியாக இருக்கும். குழந்தைகள் வழக்கத்துக்கு மாறாக அழக்கூடும் மற்றும் எச்சில் வடிக்கக்கூடும். அவர்கள் கிளர்ச்சி மற்றும் பரபரப்பும் அடையலாம். பற்கள் முளைக்கும்போது அவர்கள் நித்திரை செய்வதில் குறைவுபடலாம். ஆயினும், பெரும்பாலான குழந்தைகளுக்கு எந்த வித அறிகுறிகளும் இல்லாமலே பற்கள் முளைக்கும் காலம் முடிந்துவிடுகின்றது. மேலும், அறிகுறிகள் இருக்கும் குழந்தைகளுக்கு, நீங்கள் மற்றும் உங்கள் குழந்தை இருவருமே நல்ல ஆரோக்கியத்துடனும் ஆற்றலுடனும் இந்த நிலைமையைச் சமாளிப்பதற்கு உதவியாக, எடுக்கக்கூடிய படிகள் இருக்கின்றன.

முதன்மைப் பற்கள்வெட்டும் பற்கள், வேட்டைப் பற்கள் மற்றும் கடைவாய்ப் பற்களை அடையாளம் காணும் இலக்கமிடப்பட்ட பற்களின் விளக்கப்படம்
குழந்தைகளில் முதலில் தோன்றும் பற்கள் முதன்மைப் பற்கள் எனப்படும்.  இந்தப் பற்கள் ஒரு குறிக்கப்பட்ட ஒழுங்கில் தோன்றும் (மேலே அடைப்புக் குறிக்குள் காட்டப்பட்டுள்ளது). பெரியவருக்கான பற்கள் தோன்றும்வரை அவை நிலைக்கும்.

நீங்கள் எதை எதிர்பார்க்கலாம்

பெரும்பாலும் முதற் பல் ஏறக்குறைய 6 மாதங்களில் தோன்றும். ஒவ்வொரு பிள்ளைக்கும் வித்தியாசமான காலகட்டத்தில் பல் வளரும். ஆயினும், உங்கள் பிள்ளைக்குப் பல் மிக விரைவாக 3 மாதங்களில் அல்லது மிகவும் தாமதமாகப் 12 மாதங்களில் தோன்றினாலும் கவலைப்படவேண்டாம்.

பெரும்பாலும், இரண்டு கீழ் முன் பற்கள்( கீழ் நடு வெட்டும்பற்கள்) தான் முதலில் தோன்றுபவை. இவற்றைத் தொடர்ந்து இரண்டு மேல் முன் பற்கள்( மேல் நடு வெட்டும்பற்கள்) தோன்றும். பெரும்பாலான பிள்ளைகளுக்கு 3 வயதாகும்போது 20 ஆரம்ப நிலைப் பற்களும் (அல்லது பாற்பற்கள்) இருக்கும். 5க்கும் 13 க்கும் இடைப்பட்ட வயதுகளில், நிரந்தரமான பற்களுக்கு இடமளிப்பதற்காக உங்கள் பிள்ளை ஆரம்ப நிலைப் பற்களை இழப்பாள்.

அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

உங்கள் பிள்ளையின் பற்கள் உள்ளே வளரும்போது உங்களால் பார்க்கமுடியாது, ஆனால் பெரும்பாலும் உங்கள் பிள்ளை அதை உணர்ந்து பற்கள் முளைத்தலுக்கான அறிகுறிகளைக் காண்பிப்பாள். பற்கள் வளருவதற்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருவனவற்றை உட்படுத்தலாம்:

  • வீங்கிய அல்லது சிவந்த ஈறுகள்
  • திடமான பொருட்களை மெல்லுவதில் ஒரு ஆசை.
  • எச்சில் வடித்தல், முதற்பல் வெளியே தெரியத் தொடங்குவதற்கு 2 மாதங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கலாம்.
  • பரபரப்பு, எரிச்சலடைதல், அல்லது கோபம்

பற்கள் முளைத்தல் காய்ச்சல் அல்லது வயிற்றுப் போக்கை ஏற்படுத்தாது. உங்கள் குழந்தை இந்த அறிகுறிகளைக் காண்பிப்பதை நீங்கள் அவதானித்தால், உங்கள் மருத்துவரைத் தொடர்பு கொள்ளவும். மேலுமாக, பரபரப்பு, எரிச்சலடைதல், அல்லது கோபம் பற்கள் முளைப்பதனால் ஏற்படுகின்றன என ஊகித்துக்கொள்ள வேண்டாம்.

காரணங்கள்

ஈறைத் துளைத்துக்கொண்டு வரும் பற்கள் அசௌகரியத்தை ஏற்படுத்தும். உங்கள் குழந்தையால் அவளது புண்கள் மற்றும் வலியுணர்வை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாததால், பற்கள் மேலெழும்பும்போது அதிகளவு எரிச்சலுள்ளவளாக மற்றும் பரபரப்படைந்தவளாகக் காணப்படுவாள்.

உங்கள்    குழந்தையின் ஈறுகளின் வலியை ஆற்றுவதற்கு எப்படி உதவி செய்யலாம் என்பது பற்றிய குறிப்புகள்

உங்கள் குழந்தை அசௌகரியமாக உணர்ந்தால், பின்வரும் எளிய குறிப்புகளிலிருந்து அவளுக்கு உதவி செய்யலாம் என்பதைப் பற்றிச் சிந்திக்கவும்:

உங்கள் குழந்தையின் ஈறுகளை அழுத்திவிடவும்

சுத்தமான ஒரு விரல் அல்லது ஒரு ஈரலிப்பான துடைக்கும் துணியை உபயோகித்து, அவளது ஈறுகளை அழுத்தித் தேய்க்கவும். குளிர்ச்சியான உணர்வும் அழுத்தமும் அசௌகரியத்தைத் தணிக்கும்.

உங்கள் குழந்தைக்கு ஒரு டீத்திங்க் ரிங்கைக் கொடுக்கவும்

ஒரு டீத்திங் ரிங் உறுதியான ஒரு றப்பரினால் உருவாக்கப்பட்டது. இது உங்கள் குழந்தை தனது ஈறுகளில் அழுத்தத்தை வைக்க உதவி செய்யும். திரவங்களால் நிரப்பப்பட்ட வளையங்கள் உங்கள் குழந்தை பல்லால் அழுத்தம் கொடுத்துக் கடிக்கும்போது உடையலாம் அல்லது உங்கள் குழந்தையைக் காயப்படுத்தலாம். அதனால் திரவங்களால் நிரப்பப்பட்ட வளையங்கள் சிபாரிசு செய்யப்படவில்லை.

உங்கள் பிள்ளை ஒரு புட்டியையும் கூடப் பல்லால் கடிக்க விரும்பலாம். அதுவும் ஈறுகளில் அழுத்தத்தைக் கொடுக்கும். புட்டி ஃபோர்முலா அல்லது பழரசத்தால் நிரப்பப்படாது, தண்ணீரால் மாத்திரம் நிரப்பப்பட்டிருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளவும். ஏனெனில், இந்தத் திரவங்களிலுள்ள சீனியுடன் அதிக நேரம் பற்கள் தொடர்பு கொண்டிருக்கும்போது அவை பற்சிதைவை ஏற்படுத்தலாம்.

அதை உறைந்ததாக அல்ல குளிர்ந்ததாக வைக்கவும்

ஒரு குளிர்ந்த துடைக்கும் துணி அல்லது குளிரூட்டப்பட்ட டீத்திங் ரிங் உங்கள் பிள்ளைக்கு நிவாரணம் அளிக்கலாம். உங்கள் பிள்ளை திட உணவுகளை உட்கொள்பவளாகவிருந்தால், அப்பிள்சோஸ் அல்லது யோகேட் போன்ற குளிரூட்டப்பட்ட உணவுகளையும் மகிழ்ந்து உண்பாள். ஆயினும், அளவுக்கதிகமான குளிர் உங்கள் பிள்ளையின் வலியைத் தேற்றுவதற்குப் பதிலாக அதை மேலும் மோசமாக்கும். அதனால் குளிரால் கட்டியாக்கப்பட்ட டீத்திங் ரிங் சிபாரிசு செய்யப்படவில்லை.

வடியும் எச்சிலைத் துடைத்துவிடவும்

தொடர்ச்சியான எச்சில் வடிதல் பற்கள் வளருவதன் ஒரு பாகமாகும். அது உங்கள் பிள்ளையின் வாயை நீரேற்றப்பட்டதாகவும், ஈறுகள் சேதமடையாது பற்கள் ஈறுகளினூடாக வெளியே வர உதவி செய்யும். ஆயினும், அளவுக்கதிகமான எச்சில் உங்கள் குழந்தையின் தோலில் எரிச்சலுண்டாகச் செய்யும். ஒரு சுத்தமான துணியினால் எச்சிலைத் துடைப்பதன் மூலம் உங்கள் குழந்தையின் கீழ்த் தாடையை உலர்ந்ததாக வைத்துக்கொள்ளவும்.

வலியைக் கண்காணிக்கவும்

உங்கள் குழந்தை அதிகளவு எரிச்சலடைந்து அல்லது பரபரப்பாகக் காணப்பட்டால், வலியைக் குறைப்பதற்காக, நீங்கள் அசெட்டமினோஃபென் (டைலெனோல் அல்லது டெம்ப்ரா) அல்லது ஐபியூரோஃபின் (அட்வில் அல்லது மோட்ரின்) கொடுக்கலாம். உங்கள் பிள்ளைக்கு ASA (அசெட்டில்சாலிசிக் அசிட் அல்லது ஆஸ்பிரின்) கொடுப்பதற்கு முன்பாக எப்போதும் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்கவும்.

மருந்துக் குறிப்பில்லாத பற்கள் முளைத்தலுக்கான கிறீம்களை உபயோகிப்பதைத் தவிர்க்கவும்

ஒரு குறிப்பிட்ட வகையான லோஷனை உங்கள் மருத்துவர் சிபாரிசு செய்திருக்காவிட்டால், குழந்தையின் ஈறுகளில் நேரடியாகத் தடவும் பற்கள் முளைத்தலுக்கான மருந்துகளைத் தவிர்க்கவும். அந்த மருந்துகள் உங்கள் பிள்ளையால் விழுங்கப்பட்டுவிடும் அல்லது உங்கள் குழந்தையின் தொண்டையை மரத்துப்போகச் செய்யும். வழக்கமான வாய்ப்பூட்டின் அனிச்சையான செயலிலும் குறுக்கிடும். எல்லாவற்றிற்கும் மேலாக, லோஷன் உங்கள் குழந்தையின் எச்சிலால் கழுவப்பட்டுவிடும். அதனால் எந்தப் பயனும் இல்லாமற்போய்விடும். 

வாயைப் பராமரித்தல் மற்றும் சுத்தம் செய்தல்

முதற் பல்லைச் சுத்தம் செய்வதன் மூலம் தொடங்கவும்

உங்கள் குழந்தையின் பற்கள் வெளிவரத் தொடங்கியவுடனேயே அவற்றின் பராமரிப்பையும் தொடங்கவும். முதற் பல் வெளிவரத் தொடங்கியவுடனேயே ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அவற்றைச் சுத்தம் செய்யவும். பெரும்பாலும், இந்த மார்க்கத்தைத் தொடங்குவதற்குப் படுக்கை நேரம் தான் ஒரு சிறந்த நேரம். குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட மிருதுவான இழைகளுள்ள பற்தூரிகைகளை உபயோகிக்கவும்.

பழரசங்கள் மற்றும் இனிப்புள்ள பானங்களைத் தவிர்க்கவும்

உங்கள் குழந்தை குடிக்கும் சீனியுள்ள பானங்களில் அளவை மட்டுப்படுத்தவும். ஒரு புட்டியுடனே படுக்கைக்குப் போக அவளை அனுமதிக்கவேண்டாம்.இயற்கையாக சீனிகொண்ட பழச்சாறுகள், ஃபோர்மூலா, அல்லது தாய்ப்பால், மோசமான பற்சிதைவை உண்டாக்கும். விசேஷமாக, உங்கள் குழந்தை நித்திரை செய்யும்போது, இத் திரவங்கள் அவளின் வாய்க்குள் சிறு குளம் போல் தேங்கியிருந்தால் அவ்வாறு சம்பவிக்கும். படுக்கையில் புட்டியை உபயோகிப்பது இரும்புச் சத்துக் குறைபாட்டினால் உண்டாகும் இரத்த சோகையுடனும் சம்பந்தப்பட்டிருக்கிறது.

தயாராகியதும் ஒரு நாளில் இரண்டு முறை பல் துலக்கவும்

உங்கள் பிள்ளைக்கு 3 அல்லது 4 வயதாகும்போது, ஒரு நாளில் இரண்டு முறை குறைந்தது 2 நிமிடங்கள் அவளின் பற்களைத் துலக்கும்படி அவளுக்குக் கற்பிக்கவும். ஒரு பட்டாணி அளவிலான பற்பசையை உபயோகிக்கவும். மற்றும் பற்பசையை விழுங்கிவிடுவதற்குப் பதிலாக, அதைத் துப்பிவிடும்படி உற்சாகப்படுத்தவும். உங்கள் பிள்ளை பற்பசையை வெளியே துப்பிவிடுவதற்குப் போதியளவு வயது வரும்போது ஃபுளோரைட் கொண்ட பற்பசையை உபயோகிக்கவும்.

மருத்துவ உதவியை எப்போது நாடவேண்டும்

உங்கள் குழந்தையில் ஒரு தொடர்ச்சியான காய்ச்சலை அவதானித்தால் உங்கள் குழந்தையின் மருத்துவரைத் தொடர்பு கொள்ளவும். பற்களின் வளர்ச்சி காய்ச்சலை ஏற்படுத்தாது.

உங்கள் பிள்ளைக்கு 12 மாத வயது வரும்போது ஒரு பல்மருத்துவரிடம் அவள் தன் முதற் சந்திப்பைக் கொண்டிருக்கவேண்டும்.

முக்கிய குறிப்புகள்

  • உங்கள் குழந்தையின் பற்களைப் பராமரித்தல், உங்கள் குழந்தையின் ஈறுகளினூடாக முதற்பல் வெளியே எட்டிப்பார்த்தவுடனேயே தொடங்குகிறது.
  • ஆரோக்கியமான பற்கள், உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்துக்கு முக்கியமான பங்கை வகிக்கிறது
  • உங்கள் குழந்தையின் வலிக்கு அசெட்டமினோஃபென் அல்லது ஐபியூபரோஃபின் மருந்துகளால் சிகிச்சை செய்யவும். ஒரு மருத்துவருடன் முதலில் ஆலோசிக்காது ASA மருந்தை ஒருபோதும் கொடுக்கவேண்டாம்.
  • ஒரு குளிர்ச்சியூட்டப்பட்ட துடைக்கும் துணியால் உங்கள் குழந்தையின் ஈறுகளைத் துடைப்பதன் மூலம் அல்லது ரப்பரினால் செய்யப்பட்ட டீத்திங் ரிங்கை உபயோகிப்பதன் மூலம் அவளது ஈறுகளின் வலியைத் தணிக்கலாம்.
  • பழச்சாறு மற்றும் சோடா போன்ற சீனி சேர்க்கப்பட்ட பானங்கள் பற்சிதைவை ஏற்படுத்தும். இந்த வகையான பானங்களை உங்கள் குழந்தை உட்கொள்வதை மட்டுப்படுத்தவும். மற்றும் அவள் ஒரு புட்டியுடன் படுக்கைக்குப் போவதை ஒருபோதும் அனுமதிக்கவேண்டாம்.
Last updated: 3月 05 2010