டிரைமெத்தோப்பிறிம் (Trimethoprim)

Trimethoprim [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

உங்கள் பிள்ளை டிரைமெத்தோப்பிறிம் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். டிரைமெத்தோப்பிறிம் மருந்து என்ன செய்கிறது, இதை எப்படிக் கொடுக்கவேண்டும், உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும் என்பன பற்றி

உங்கள் பிள்ளை டிரைமெத்தோப்பிறிம் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். டிரைமெத்தோப்பிறிம் மருந்து என்ன செய்கிறது, இதை எப்படிக் கொடுக்கவேண்டும், உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும் என்பன பற்றி இந்தத் தகவல் தாள் விபரிக்கும்.

இந்த மருந்து எப்படிப்பட்டது?

டிரைமெத்தோப்பிறிம் என்பது அன்டிபையோடிக் என அழைக்கப்படும் ஒரு மருந்து. அன்டிபையோடிக் மருந்துகள், பக்டீரியா என அழைக்கப்படும் கிருமிகளால் ஏற்படும் குறிப்பிட்ட சில வகையான தொற்றுநோய்களுக்குச் சிகிச்சையளிப்பதற்கு மற்றும் அவற்றைத் தடுப்பதற்கு உபயோகிக்கப்படுகின்றன. டிரைமெத்தோப்பிறிம் மருந்து, மாத்திரை அல்லது திரவ வடிவில் கிடைக்கிறது.

இந்த மருந்தை உங்கள் பிள்ளைக்குக் கொடுப்பதற்கு முன்பு...

  • உங்கள் பிள்ளைக்கு எப்போதாவது டிரைமெத்தோப்பிறிம் மருந்துக்கு எதாவது அசாதாரண அல்லது ஒவ்வாமை எதிர்விளைவு இருந்திருந்தால் உங்கள் மருத்துவருக்குத் தெரிவிக்கவும்.

உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் நிலைமைகளில் ஏதாவது இருந்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் பேசவும். உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் நிலைமைகள் இருந்தால் முன்னெச்சரிக்கைகள் எடுக்கவேண்டும்:

  • கல்லீரல் அல்லது சிறுநீரக நோய்
  • இரத்த சோகை( சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கையில் குறைவுபடுதல்)

உங்கள் பிள்ளைக்கு இந்த மருந்தை எப்படிக் கொடுக்கவேண்டும்?

உங்கள் பிள்ளைக்கு டிரைமெத்தோப்பிறிம் மருந்தைக் கொடுக்கும்போது பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றவும்:

  • உங்கள் பிள்ளைக்கு இந்த மருந்தை உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளர் சொல்லும்வரை, உங்கள் பிள்ளை நிவாரணமடைந்தாலும் கூட, தொடர்ந்து கொடுக்கவும்.
  • உங்கள் பிள்ளைக்கு டிரைமெத்தோப்பிறிம் மருந்தை ஒவ்வொரு நாளும் அதே நேரத்தில்(நேரங்களில்) கொடுக்கவும். மருந்து கொடுக்கும் நேரத்தைத் தவறவிடாதிருப்பதற்காக, உங்களுக்கு வசதியான ஒரு நேரத்தைத் தெரிவு செய்யவும்.
  • இந்த மருந்தை வெறும் வயிற்றில்(உணவு உண்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு அல்லது உணவு உண்டு 2 மணி நேரங்களுக்குப் பின்பு) ஒரு முழு கிளாஸ் பானத்துடன் கொடுக்கவும். அது உங்கள் பிள்ளையின் வயிற்றில் குழப்பத்தை ஏற்படுத்தினால், அதை உணவுடன் சேர்த்து உட்கொள்ளலாம்.
  • உங்கள் பிள்ளை டிரைமெத்தோப்பிறிம் மருந்தின் திரவ வடிவத்தை உட்கொள்வதாக இருந்தால், மருந்தாளர் உங்களுக்குக் கொடுத்த விசேஷ கரண்டி அல்லது பீச்சாங்குழாய்(ஸ்ரிஞ்) மூலம் வேளைமருந்தை அளக்கவும். வேளைமருந்தை அளப்பதற்கு முன்னர் போத்தலை நன்கு குலுக்கவும்.
  • உங்கள் பிள்ளை மாத்திரையை உட்கொள்பவனா(ளா)க மற்றும் அதை விழுங்கமுடியாமல் இருந்தால், அது நசுக்கப்பட்டு மற்றும் சிறிதளவு உணவு அல்லது திரவத்துடன் கலக்கப்படலாம்.

உங்கள் பிள்ளை வேளை மருந்து ஒன்றைத் தவறவிட்டால் நீங்கள் என்ன செய்யவேண்டும்?

உங்கள் பிள்ளை டிரைமெத்தோப்பிறிம் மருந்தின் ஒரு வேளைமருந்தைத் தவறவிட்டால் பின்வருவனவற்றைச் செய்யவும்:

  • உங்களுக்கு ஞாபகம் வந்தவுடனேயே, தவறவிடப்பட்ட வேளை மருந்தைக் கொடுக்கவும்.
  • அடுத்த வேளைமருந்துக்கான நேரம் நெருங்கிவிட்டிருந்தால், தவறவிட்ட வேளைமருந்தைக் கொடுக்காது விடவும். அடுத்த வேளைமருந்தை சரியான நேரத்தில் கொடுக்கவும்.
  • ஒரே சமயத்தில் ஒரு வேளைமருந்தை மாத்திரம் உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவும்.

இந்த மருந்து வேலை செய்யத் தொடங்க எவ்வளவு காலம் செல்லும்?

இந்த மருந்தை உட்கொள்ளத் தொடங்கி பல நாட்களின் பின்பு உங்கள் பிள்ளை நிவாரணமடைவதை உணரக்கூடும்..

இந்த மருந்தினால் சாத்தியமாகக்கூடிய பக்கவிளைவுகள் எவை?

உங்கள் பிள்ளை டிரைமெத்தோப்பிறிம் மருந்தை உட்கொள்ளும்போது பின்வரும் சில பக்கவிளைவுகளைக் கொண்டிருக்கக்கூடும். பெரும்பாலும் அதற்காக உங்கள் பிள்ளை மருத்துவரைச் சந்திக்கவேண்டிய அவசியமில்லை. உங்கள் பிள்ளையின் உடல் டிரைமெத்தோப்பிறிம் மருந்துக்குப் பழக்கப்படுத்தப்படும்போது இந்தப் பக்கவிளைவுகள் மறைந்துவிடும்.

  • பசியின்மை
  • வயிற்றில் தசைப்பிடிப்பு மற்றும் வலி
  • மலம் தண்ணீர் போல கழிதல் (வயிற்றுப்போக்கு)
  • வயிற்றுக் குழப்பம், வாந்தி
  • தலைவலி

பின்வரும் பக்கவிளைவுகளில் பெரும்பாலானவை சாதாரணமானவையல்ல, ஆனால் அவை கடுமையான பிரச்சினைக்கு ஒரு அடையாளமாக இருக்கலாம். பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது இருந்தால் உடனே உங்கள் பிள்ளையின் மருத்துவரை அழைக்கவும் அல்லது உங்கள் பிள்ளையை அவசர நிலைச் சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லவும்:

  • அசாதாரண இரத்தக்கசிவு அல்லது நசுக்குக்காயம்
  • காயங்கள் ஆறுவதில் மந்த நிலை
  • தொண்டை வலி அல்லது காய்ச்சல்
  • கடுமையான தலைவலி, கழுத்து விறைப்பு
  • மூட்டுக்கள் மற்றும் தசைகளில் வேதனை
  • சிவந்த, கொப்பளங்கள், அல்லது தோல் உரிதல்
  • தோற்படை அல்லது தோல் அரிப்பு
  • கைவிரல்கள், உதடுகள், அல்லது தோல் நீல நிறமாதல்
  • சுவாசிப்பதில் சிரமம்
  • வழக்கத்துக்கு மாறான களைப்பு அல்லது வீக்கம்
  • குழப்பம்
  • மஞ்சள் நிறத் தோல் மற்றும் கண்கள்
  • அடர்நிற சிறுநீர்

உங்கள் பிள்ளை இந்த மருந்துகளை உட்கொள்ளும்போது என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்கவேண்டும்?

  • டிரைமெத்தோப்பிறிம் மருந்து உங்கள் பிள்ளையின் தோலில், சூரிய எரிவினால் (சன்பெர்ன்) அதிக நிறமாற்றத்தை ஏற்படுத்தலாம். வெளியே போகும்போது உங்கள் பிள்ளையின் தலையை ஒரு தொப்பியால் மூடவும். உங்கள் பிள்ளை சன்ஸ்கிறீன் கீறீமையும் உபயோகிக்கவேண்டும். சரியான சன்ஸ்கிறீனைத் தெரிவு செய்ய உதவும்படி உங்கள் மருத்துவரிடம் கேட்கவும்.
  • டிரைமெத்தோப்பிறிம் மருந்து இரத்தத்தில் அளவைக் (பிளட் கவுன்ட்) குறைக்கலாம். உங்கள் பிள்ளை இந்த மருந்தை நீண்டகாலமாக உட்கொள்வதாக இருந்தால் அவனு(ளு)க்கு இரத்தப் பரிசோதனைகள் தேவைப்படலாம். உங்கள் பிள்ளையின் இரத்தத்தில் அளவு குறைந்தால், உங்கள் மருத்துவர், தாதி, அல்லது மருந்தாளர், உங்கள் பிள்ளை தொற்றுநோய்கள் மற்றும் இரத்தக் கசிவைத் தடுக்க எப்படி முயற்சி செய்யலாம் என்பதைத் தெரிவிப்பார்கள்.
  • டிரைமெத்தோப்பிறிம் மருந்து வேறு மருந்துகளுடன் சேர்ந்து நன்கு வேலை செய்யாமல் இருக்கலாம். உங்கள் பிள்ளைக்கு வேறு ஏதாவது மருந்துகள் (மருந்துக் குறிப்புள்ள, மருந்துக் குறிப்பில்லாத, மூலிகை அல்லது இயற்கை மருந்துப் பொருட்கள்) கொடுப்பதற்கு முன்பாக உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் கேட்கவும்.
  • உங்கள் பிள்ளை ஏதாவது அறுவைச் சிகிச்சைக்கு உட்படுவதற்கு முன்பு, பல் அறுவைச் சிகிச்சையாக இருந்தாலும் கூட, அல்லது அவசரநிலை சிகிச்சைக்கு முன்னர், உங்கள் பிள்ளை டிரைமெத்தோப்பிறிம் மருந்தை உட்கொள்வதாக, உங்கள் மருத்துவர் அல்லது பல் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.

நீங்கள் அறிந்திருக்கவேண்டிய வேறு முக்கியமான தகவல்கள் எவை?

டிரைமெத்தோப்பிறிம் திரவ மருந்து ஒரு மருந்துக்கடையால் தயாரிக்கப்படவேண்டும். உங்கள் பிள்ளைக்காக அதை உங்கள் மருந்துக்கடையால் தயாரித்துக் கொடுக்கமுடியுமா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளவும்.

வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், மற்றும் விடுமுறைச் சுற்றுலா நாட்கள் வரை நீடிக்கக்கூடிய, போதியளவு டிரைமெத்தோப்பிறிம் மருந்தை எப்போதும் கைவசம் வைத்திருக்க நிச்சயமாயிருங்கள். உங்கள் பிள்ளையின் மருந்து தீர்ந்துபோவதற்கு 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, உங்கள் மருந்துக்கடையை அழைக்கவும்.

டிரைமெத்தோப்பிறிம் மருந்தை அதன் அசல் போத்தலுடன் அறை வெப்பநிலையில், குளிர்ச்சியான, உலர்ந்த இடத்தில் சூரியவெளிச்சம் படாமல் வைக்கவும். குளியலறை அல்லது சமயலறையில் வைக்கவேண்டாம்.

உங்கள் பிள்ளை உட்கொள்ளும் எல்லா மருந்துகளின் பட்டியலையும் வைத்துக்கொள்ளவும் மற்றும் அதை மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் காண்பிக்கவும்.

உங்கள் பிள்ளையின் மருந்துகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டாம். வேறொருவரின் மருந்தை உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவேண்டாம்.

காலாவதியான எந்த மருந்துகளையும் வைத்திருக்கவேண்டாம். காலாவதியான அல்லது மீந்துபோன மருந்துகளை எறிந்து விடுவதற்கான மிகச் சிறந்த வழி என்ன என்பதை உங்கள் மருந்தாளரிடம் கேட்கவும்.

டிரைமெத்தோப்பிறிம் மருந்தை உங்கள் பிள்ளையின் கண்களில் படாதவாறு மற்றும் எட்டாதவாறு, ஒரு பூட்டப்பட்ட பாதுகாப்பான இடத்தில் வைக்கவும். உங்கள் பிள்ளை அளவுக்கதிகமான டிரைமெத்தோப்பிறிம் மருந்தை உட்கொண்டுவிட்டால், ஒன்டாரியோ பொய்சன் சென்டருக்கு பின்வரும் தொலைபேசி எண்களில் ஒன்றை அழைக்கவும். இந்த அழைப்புகள் இலவசமானவை:

  • நீங்கள் டொரொன்டோவில் வாழ்ந்தால் 416-813-5900 ஐ அழைக்கவும்.
  • நீங்கள் ஒன்டாரியோவில் வெறெங்கேயாவது வாழ்ந்தால் 1-800-268-9017 ஐ அழைக்கவும்.
  • நீங்கள் ஒன்டாரியோவுக்கு வெளியே வாழ்ந்தால், உங்கள் உள்ளூர் பொய்சன் இன்ஃபொர்மேஷன் சென்டரை அழைக்கவும்.

பொறுப்புத்துறப்பு: இந்த குடும்ப மருத்துவ உதவியிலுள்ள (Family Med-aid) தகவல்கள் அச்சிடும்வரை திருத்தமாக இருக்கிறது. இது டிரைமெத்தோப்பிறிம் மருந்தைப் பற்றிய தகவல்களின் ஒரு சுருக்கத்தை அளிக்கிறது. ஆனால் இந்த மருந்தைப்பற்றிய சாத்தியமான எல்லாத் தகவல்களையும் கொண்டில்லை. எல்லாப் பக்கவிளைவுகளும் பட்டியலிடப்பட்டில்லை. டிரைமெத்தோப்பிறிம் மருந்தைப் பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அல்லது மேலதிக தகவல்களைத் தெரிந்து கொள்ளவிரும்பினால், உங்கள் உடல்நலப் பராமரிப்பளிப்பவருடன் பேசவும்.

Last updated: 3月 12 2010